புதிதாக ரூ.970 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடம் மே 28 ஆம் தேதி திறக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதனை திறந்துவைக்கிறார். டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம் புதிய நாடாளுமன்றத்தை கட்டியுள்ளது. இதற்கான வடிவமைப்பு அகமதாபாத்தின் ஹெச்சிபி டிசைன் வழங்கியது.
தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடம், 100 ஆண்டுகள் பழமையானது. எனவே, அதற்கு பதிலாக சென்டிரல் விஸ்டா என்ற பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு மத்தியஅரசு முடிவு செய்தது.
இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ராஜபாதை (கடமைப்பாதை) சீரமைப்பு, பொதுவான மத்திய செயலகம், பிரதமருக்கான புதிய இல்லம் மற்றும் அலுவலகம், துணை குடியரசுத் தலைவருக்கான புதிய மாளிகை ஆகிய புதிய கட்டுமானங்களின் ஓர் அங்கமாக நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது.

இந்திய ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரம்மாண்ட அரசியல் சாசன அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர கேன்டீன், வாகன பார்க்கிங் வசதிகளும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்ற தலைவர்களுடன் இணைந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் திறக்க வேண்டும் என்றும் அவர்தான் இந்தியாவின் முதல் குடிமகன் எனவே பிரதமரால் திறக்கப்படக் கூடாது என்று ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்தார். அரசியலமைப்பு உரிமை குறித்த வாதத்தின் பக்கம் சாய்ந்து சர்ச்சையில் இருந்ததால் அன்றைய முக்கியத்துவத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை இந்த பிரச்சினையை தலித் மற்றும் பழங்குடியினருடன் தொடர்புபடுத்தினார். “தேர்தல் காரணங்களுக்காக மட்டுமே தலித் மற்றும் பழங்குடி சமூகங்களில் இருந்து இந்திய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதை மோடி அரசு உறுதி செய்தது போல் தெரிகிறது. புதிய நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழாவிற்கு, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவிற்கு, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைக்கப்படவில்லை” என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.இது மரபுக்கு மீறிய செயலாகவே பார்க்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் குடியரசுத்தலைவர் அழைக்கப்படாதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளருமான ரவிக்குமார் எம்பி யும் தனது ட்விட்டர் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.