- தனிநபரை தாக்கிய வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி தலைமறைவானவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
இந்த வழக்கில் 6 பேரை விசாரணை மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் கீழமை நீதிமன்றம் விடுவித்துள்ளது. 6 பேரை விடுவித்தது மனுதாரருக்கும் பொருந்தும் என அவசியம் இல்லை.- நீதிபதி
எனவே மனுதாரர், முறையாக விசாரணை நீதிமன்றத்தில் இந்த வழக்கை சந்திக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
புதுக்கோட்டை மாவட்டம் வடக்காடு பகுதியில் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஒருவர் கேக் வெட்டி கொண்டாடியபோது, அவரை, 9 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் காயமடைந்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட 9 பேர் மீது, எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வடக்காடு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்தனர். தாக்குதில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர், 3 பேர் தலைமறைவாகினர்.
இந்த வழக்கை விசாரித்த புதுக்கோட்டை விசாரணை நீதிமன்றம் கடந்த 2019 ஆம் ஆண்டு, 6 பேரை விடுவித்தது.
இந்த வழக்கில் 9 வது நபரான தலைமறைவாக இருந்த தமிழரசன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “புதுக்கோட்டை விசாரணை நீதிமன்றத்தில் 6 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதுபோல், இந்த வழக்கிலிருந்து என்னையும் விடுவித்து உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, ” இந்த வழக்கில் (ஒன்று முதல் ஆறு வரையிலானவர்களை) 6 பேரை விசாரணை மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் புதுக்கோட்டை விசாரணை நீதிமன்றம் விடுவித்துள்ளது. 6 பேரை விடுவித்தது மனுதாரருக்கும் பொருந்தும் என்பது அவசியம் இல்லை. எனவே மனுதாரர், முறையாக விசாரணை நீதிமன்றத்தில் இந்த வழக்கை சந்திக்க வேண்டும்” என உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தார்.