- மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணு நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியதையடுத்து ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம், சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணுவுக்கு எதிராக சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த 7ம் தேதி கைது செய்தனர்.

இந்நிலையில் ஜாமீன் கோரி மகாவிஷ்ணு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் நோக்கில் தான் பேசவில்லை எனவும், தனது பேச்சு அவர்களை புண்படுத்தியிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் கூறியிருக்கிறார்.
மேலும், தனது பேச்சு எடிட் செய்யப்பட்டு யூ டியூபில் வெளியிடப்பட்டதாகவும், முழு பேச்சை கேட்காமல், தனக்கு எதிராக பொய் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருக்கிறார்.
எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் கைதானதாகவும், காவலில் வைத்து போலீசார் விசாரித்த போது முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், தனது அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள், வீடியோ தொகுப்புகள் என அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
இந்த மனு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மகா விஷ்ணு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயந்தி, மஹா விஷ்ணுவின் மன்னிப்பு கடிதத்தை சிறைத்துறை அதிகாரிகள் மூலம் பெற்று அதனை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு தாக்கல் செய்தார்.மேலும் மஹா விஷ்ணு மாற்று திறனாளிகளுக்கு உதுவும் புகைப்படங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/the-madras-high-court-has-quashed-the-case-against-kanal-kannan-for-talking-about-breaking-the-statue-of-periyar/
காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மஹா விஷ்ணு மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசியது ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பரவி வருவதால் அவருக்கு ஜாமின் வழங்க கூடாது என்று வாதிட்டார்.
இதையடுத்து மஹா விஷ்ணுவின் மன்னிப்பையும், இனி இவ்வாறு பேச மாட்டேன் என்ற உத்திரவாதத்தையும் ஏற்று கொண்ட நீதிபதி, அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.