நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஜே.கே.கே. ரங்கம்மாள் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் அமல்ராஜ், சண்முகம் மற்றும் முருகானந்தம் ஆகியோர் வசித்து வந்துள்ளனர் இடத்தை காலி செய்யக் கூறியும் காலி செய்யாததால், அறக்கட்டளை நிர்வாகி செந்தாமரை, நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கின் உத்தரவு தனக்கு சாதகமாக வந்ததை அடுத்து, நீதிமன்ற ஊழியர்களுடன் மூவரையும் காலி செய்வதற்கு சென்றுள்ளார். அப்போது, காலி செய்யும் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை வாங்கியுள்ளதாக கூறி அதற்கான நகலை முருகானந்தம் கொடுத்துள்ளார்.
ஆனால் இது போன்ற எந்த உத்தரவும் நீதிமன்றத்தில் பெறவில்லை எனவும் இந்த உத்தரவு போலியனாது எனவும் செந்தாமரை சார்பில் நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், சென்னை உயர் நீதிமன்ற பதிவாளரிடமும் புகார் அளிக்கப்பட்டது.
உயர் நீதிமன்ற உத்தரவு நகலை போலியாக தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செந்தாமரை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கலாம் என இரு நீதிபதிகள் அமர்வுக்கு கடந்த 2018ம் ஆண்டு பரிந்துரைத்தார்.
இதனையடுத்து, கடந்த 2022ம் ஆண்டு
அமல்ராஜ், சண்முகம், முருகானந்தம் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக சிறப்புக் குழுவை அமைத்து விசாரிக்க டிஜிபிக்கு உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டிருந்தது.இதையடுத்து, விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கு சேர்க்கப்பட்டுள்ள ஏழு பேரில் இரண்டு பேர் உயிரிழந்ததாலும், மீதம் இருவர் மீதான புகாருக்கு முகாந்திரம் இல்லை எனக்கூறி அவர்களை நீதிபதிகள் விடுவித்தனர்.
அமல்ராஜ், சண்முகம், முருகானந்தம் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, மூவருக்கு தலா ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.இதனையடுத்து, உடனடியாக மூவரையும் புழல் சிறையில் அடைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.