- சென்னை பத்திரிக்கையாளர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க நிதியை முறைகேடு செய்ததாக அளிக்கப்பட்ட புகார் மனு மீது உரிய பரிசீலினை செய்து 6 வாரங்களில் முடிவெடுக்க கூட்டுறவு சங்க வீட்டு வசதி துணை பதிவாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை பத்திரிக்கையாளர் கூட்டுறவு வீட்டுவசதி சங்க உறுப்பினர்,
சுயம்பு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில், பத்திரிக்கை துறையில் பணியாற்றுபவர்களை சங்க உறுப்பினர்களாக சேர்த்து அவர்களுக்கு வீடு கட்ட தேவையான உதவிகளை இச்சங்கம் செய்து வந்தது.
வங்கிகள் மூலம் சங்க உறுப்பினர்களுக்கு வீட்டுக்கடன் பெறும் போது அதில் 1% கமிஷனாக வழங்க வங்கிகளுடன் கடந்த 1994 ம் ஆண்டு இச்சங்கம் ஒப்பந்தம் போட்டது.

பின்னர் உறுப்பினர்கள் பெயரில் வீட்டுக்கடனுக்கான வங்கி கணக்குகள் திறக்கப்பட்டு, கடந்த 1995 ம் ஆண்டு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது.
அதன் மூலம் கிடைத்த கமிஷன் தொகை சங்கத்திற்கு கிடைத்தவுடன், உறுப்பினர்களிடம் எந்த அனுமதி பெறாமல் வங்கி கணக்குகளை மூடப்பட்டதாக மனுவில் குற்றச்சாட்டியிருந்தார்.
இதன் மூலம் சங்க உறுப்பினர்களின் பெயரை பயன்படுத்தியும் வங்கியில் இருந்து 86 லட்சம் ரூபாயும், சங்க நிதி 3 கோடி ரூபாயையும் முறைகேடு செய்திருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சங்கத்தின் நிர்வாகிகள் சிலர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததால், பத்திரிக்கையாளர்களை அச்சங்கத்தில் இருந்து வெளியேற்றியதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக கூட்டுறவு சங்க வீட்டு வசதிப் பதிவாளர், துணைப் பதிவாளர் ஆகியோர் விசாரணை நடத்த கடந்த 2023 ம் ஆண்டு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் நீதிதுரை ஆஜராகி, இந்த முறைகேடுகள் தொடர்பாக கூட்டுறவு சங்கத்தின் வீட்டு வசதி பிரிவின் துணை பதிவாளர் உரிய விசராணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் முறைக்கேட்டில் ஈடுப்பட்ட சங்க நிர்வாகிகளை சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தவறு செய்த நிர்வாகிகள் மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என வாதம் வைத்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதி, மனுதாரர் கூட்டுறவு சங்க பதிவளாருக்கு அளித்த புகார் மனு மீது உரிய பரிசீலனை செய்து, விசாரித்து 6 வாரங்களில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முடிவெடுக்க கூட்டுறவு சங்க வீட்டு வசதி துணைப்பதிவாளருக்கு உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.