- “வணங்கான்” தலைப்பை பயன்படுத்த தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கில், இயக்குனர் பாலா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், தேசிய விருதுகளை பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடிப்பில் “வணங்கான்” திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், “வணங்கான்” என்ற தலைப்பை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, ஆரஞ்ச் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எஸ். சரவணன் என்பவர் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பட தலைப்புக்கு காப்புரிமை சட்டம் பொருந்தாது எனக் கூறி, “வணங்கான்” பெயரை பயன்படுத்தவும், படத்தை வெளியிடவும் தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஆரஞ்ச் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எஸ். சரவணன் தரப்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், வணங்கான் என்ற தலைப்பை கடந்த 2020ம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி சங்கத்தில் பதிவு செய்திருந்ததாகவும், தொடர்ந்து புதுப்பித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், சட்டபிரச்னைகள் எதுவும் வரக்கூடாது என்பதற்காக தயாரிப்பாளரும், இயக்குனரும் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தார்கள்.ஆனால் திடிரென்று பின்வாங்கியதால் இந்த வழக்கை தாக்கல் செய்ய நிர்பந்தம் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வு, இயக்குனர் பாலா, மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி , தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியோர் செப்டம்பர் 24ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தனர்.