நீதிமன்ற விசாரணைக்கு இடையூறு செய்ததாக, வழக்கு தொடுத்த சிவில் இன்ஜினியருக்கு, 50,000 ரூபாய் வழக்கு செலவுத்தொகை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவில் இன்ஜினியரான கண்ணன் சுவாமிநாதன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘குடிநீர் வழங்கல் பணிக்கான டெண்டர் நடைமுறை, வெளிப்படையாக நடக்கவில்லை.
இதில், முறைகேடுகள் நடந்துள்ளன. தேசிய ஜல் ஜீவன் மிஷன் அமைப்பிடம் புகார் அளித்தேன். அதை, தமிழக அரசின் உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலருக்கு அனுப்பியது.
எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, நீதிமன்ற கண்காணிப்பில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று, கூறப்பட்டுள்ளது.
மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது.
குடிநீர் வழங்கல் துறை சார்பில், வழக்கறிஞர் எஸ்.மேகலா, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ், அரசு வழக்கறிஞர் கிேஷார்குமார் ஆஜராகினர்.
குடிநீர் வழங்கல் துறை சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘மனுதாரரின் சகோதரர், கும்பகோணத்தில் ஒப்பந்ததாரராக உள்ளார்.
‘ஐந்து பேரூராட்சிகளில், ஒருங்கிணைந்த குடிநீர் வழங்கல் திட்டங்களின் செயல்பாடு மற்றும் பராமரிப்பை கவனிக்கும் ஒப்பந்தம், கடந்த ஆண்டுக்கு வழங்கப்பட்டது.
தற்போது, டெண்டரில் பங்கேற்க அவருக்கு தகுதியில்லை. இந்த விபரங்களை மனுதாரர் மறைத்துள்ளார். இந்த வழக்கில், பொது நலன் இல்லை’ என, கூறப்பட்டது.
மனுவை விசாரித்த, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
பொது நலன் கருதி, இந்த மனுவை தாக்கல் செய்யவில்லை. குடிநீர் வழங்கல் துறை தரப்பில் ஆட்சேபனை தெரிவித்தும், மனுதாரர் தரப்பில் எந்த பதிலும் தாக்கல் செய்யவில்லை.
கடந்த ஜூனில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை.
ஜூலையில் விசாரணைக்கு வந்த போது, வழக்கறிஞர் ஆஜரானார். அடுத்ததாக, வழக்கு விசாரணைக்கு வந்த போது, காணொலி வாயிலாக மனுதாரர் ஆஜராகி, நீதிமன்ற நடவடிக்கையில் குறுக்கிட்டார்.
நாங்கள் மீண்டும் மீண்டும் எச்சரித்தும், வழக்கறிஞர் உடன் சேர்ந்து, மனுதாரரும் வாதிட்டார். நீதிமன்ற விசாரணைக்கு இடையூறு செய்யும் விதமாக செயல்பட்டதாலும், இந்த வழக்கில் எந்த பொது நலனும் இல்லாததாலும் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.
வழக்கு செலவுத்தொகையாக, மனுதாரருக்கு 50,000 ரூபாய் விதிக்கப்படுகிறது. மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு, அந்தத் தொகையை செலுத்த வேண்டும்.
இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.