- கோவில் நிலங்களில் சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளை தடுத்து, நிலங்களை பாதுகாக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் சட்டவிரோதமாக கனிம வளங்கள் திருடப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி 2022ம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என, ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்து சமய அறநிலையத்துறை திருவண்ணாமலை இணை ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இரு கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் சரக டிஐஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளில் ஈடுபட்டது தொடர்பாக, 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்குகள் விசாரணை நடந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு அறிக்கைகளையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, கோவில் நிலங்களில் சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளை தடுத்து, நிலங்களை பாதுகாக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தி, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளார்.