- கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக,பாமக,பாஜக உள்ளிட்டவை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ண குமார், நீதிபதி பி.பி. பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது . அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.ராமன், கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி முக்கியத்துவம் இல்லாத பதவிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட மது விலக்கு துணை ஆணையர் மற்றும் 8 காவல்துறையினர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை தொடர்வதாக கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், எஸ்.பி மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது ஏன்? அவர் மீதான விசாரணை முடிந்து விட்டதா? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர் , இந்த விவகாரத்தில் எஸ்.பி.க்கு நேரடி தொடர்பில்லை எனவும் எஸ்.பி. மீதான துறை ரீதியான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறினார்.வழக்கின் விசாரணை அதிகாரிகளை மாற்றத் தேவையில்லை எனக்கூறிய தலைமை வழக்கறிஞர், சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை தொடரட்டும் அதில் குறைகள் எதுவும் இருந்தால் விசாரணையை மாற்றுவது குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கட்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், புகார் வந்தவுடன் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாகவும் , விஷச் சாராய மரணத்திற்கும் புதுச்சேரிக்கும் எந்த தொடர்பில்லை எனவும் தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு பிரிவில் எவ்வளவு போலீசார் உள்ளனர் என நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர் ஒவ்வொரு மாவட்டத்திலும் 1 டிஎஸ்பி , 3 ஆய்வாளர்கள் மற்றும் 60-70 காவலர்கள் கொண்ட குழு உள்ளதாக குறிப்பிட்டார்.

அப்போது , கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக அதிக வழக்குகள் பதிவாகும் மாவட்டங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்கலாமே? எனவும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மட்டும் கள்ளச்சாராயம் விற்பனை அதிகம் ஏன்? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து , அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.