ஜல்லிக்கட்டு வழக்கின் உச்சநீதிமன்றம் தீர்ப்பு திராவிடக் கலாச்சாரத்துக்குக் கிடைத்த பெரு வெற்றி என்று திராவிடர் கழகம் தலைவர் கீ.வீரமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது முகநூல் பதிவில்,”ஜல்லிக்கட்டு நடத்தத் தடையில்லை என்று மாண்பமை உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசமைப்புச் சட்ட அமர்வு இன்று (18.5.2023) வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கதும் வரலாற்றுச் சிறப்புமிக்கதும் ஆகும்.
இது, சிந்துவெளி நாகரிகம் முதல் இன்று வரை தொடரும் திராவிடர் வரலாற்றுத் தொடர்ச்சியின் அடையாளத்திற்குக் கிடைத்த பெரு வெற்றியாகும். தமிழ்நாடு அரசின் வாதங்களை ஏற்றுக் கொண்டு, ஜல்லிக்கட்டைத் தடை செய்ய முயன்ற ஆரிய சூழ்ச்சிகளுக்கு சம்மட்டி அடி வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
சட்டரீதியாக சரியாக எதிர்கொண்ட தமிழ்நாடு அரசுக்கு நமது பாராட்டுகள்! பண்பாட்டுப் படையெடுப்புகளுக்கு எதிரான திராவிடர் வரலாற்று, பண்பாட்டு அடையாள மீட்புப் போரில் இது ஒரு முக்கிய மைல் கல்லாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.