உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு.கிள்ளனூர் கிராமத்தில் மகன் தற்கொலை செய்து கொண்டு 4 மாதங்களே ஆன நிலையில், மாற்றுத்திறனாளி தந்தை ரத்தக்காயத்துடன் சடலமாக வீட்டில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு.கிள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் டீ மாஸ்டராக வேலை பார்த்து வரும் மாற்றுத்திறனாளியான இவர் வெள்ளிக்கிழமை மாலை வேலையை முடித்துவிட்டு, தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு செல்வதற்காக புறப்பட்ட நிலையில், மது அருந்திவிட்டு வந்த வெங்கடேசன் தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை என்று பல இடங்களில் தேடியுள்ளார்.

இந்த நிலையில் சனிக்கிழமை காலை அவரது வீட்டில் கழுத்து, உடல் ஆகிய இடங்களில் ரத்தக்காயத்துடன் வெங்கடேசன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதைப் பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்ததோடு உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் பு.கிள்ளனூர் கிராமத்திற்கு வந்த அவரது உறவினர்கள் வெங்கடேசனின் இருசக்கர வாகனம் உளுந்தூர்பேட்டை விருத்தாசலம் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் பகுதியில் நிற்பதாக கூறியுள்ளனர்.

மேலும் இதுகுறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் டி.எஸ்.பி மகேஷ் மற்றும் போலீசார் மர்மமான முறையில் சந்தேகத்திற்கிடமான நிலையில் தலை, கழுத்து, உடல் என பல்வேறு இடங்களில் ரத்த காயத்துடன் சடலமாக கிடந்த அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வெள்ளிக்கிழமை இரவு காணாமல் போன இருசக்கர வாகனம் விருத்தாசலம் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் பகுதியில் எப்படி நின்றது? நிறுத்தியது யார்? வெங்கடேசன் பு.கிள்ளனூர் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு சென்றது எப்படி? கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வெங்கடேசன் மகன் மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ஏன்? என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் வெங்கடேசன் உயிரிழப்பு சம்பவம்.

போலீசார் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து வெங்கடேசன் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது யாரேனும் அடித்து தூக்கில் தொங்கவிட்டனரா? என்றும் தூக்கில் தொங்க விட்டிருந்தாலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தாலும் தூக்கிலிடுவதற்கான கயிறு, துணி உள்ளிட்டவை எங்கே என பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பி உள்ளது.
இதனால் வெங்கடேசனின் பிரேத பரிசோதனை வெளிவந்த பிறகு அவர் எப்படி உயிரிழந்தார் என்பதற்கான விடை கிடைக்கும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.