பழநிஅருகே இயக்குனர் பாரதிராஜா நடித்துவரும் படப்பிடிப்பில் இடிதாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இயக்குனர் சுசீந்தரன் தனது சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளளார்.
பழநிஅருகே கணக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது கோம்பைப்பட்டி கிராமம். இக்கிராமத்தில் இயக்குனர் சுசீந்தரன் இயக்கிவரும் மார்கழி திங்கள் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது. இப்படத்தில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, அவரது மகன் மனோஜ், அப்புக்குட்டி, ரக்ஷணா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். நேற்று மாலை கோம்பைப்பட்டி பகுதியில் உள்ள மக்காச்சோளம் தோட்டத்தில் படப்பிடிப்பு நடந்து வந்தது.

அப்போது அப்பகுதியில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது மின்னல் வெட்டுடன் கூடிய பலத்த இடி ஒன்று இடித்தது. இதில் அங்கு படப்பிடிப்பில் பயன்படுத்தி வந்த மின்விளக்கு ஒன்றின் மீது இடி தாக்கியது. இதில் மின்விளக்கு அருகே நின்றிருந்த 5தொழில்நுட்ப கலைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் படப்பிடிப்பு தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து இயக்குனர் சுசீந்தரன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ வைரலாகி உள்ளது.