மகாராஷ்டிரா மாநிலத்தில் வாங்கிய கடனை கணவர் திருப்பி செலுத்தத் தவறியதால் அவரது மனைவியைக் கந்துவட்டிக்காரன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிலும் குறிப்பாக பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், பல நேரங்களில் ஆண்கள் தங்கள் ஆணாதிக்க மனோபாவத்தைக் காட்டவும் கூட பெண்களுக்கு எதிராக மிக மோசமான வன்முறையில் ஈடுபடுகிறார்கள். அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.
பலாத்காரம்:
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 47 வயதான ஒருவர் கந்துவட்டி தொழிலைச் செய்து வருகிறார். அவரிடம் இருந்து கடன் வாங்கிய ஒருவர் கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் இந்த கொடூரன் கடன் வாங்கிய அந்த நபரின் மனைவியைப் பலாத்காரம் செய்துள்ளான். கடந்த பிப். மாதம் நடந்த இந்த கொடூரம் இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் சம்மந்தப்பட்ட அந்த குற்றவாளியைக் கைது செய்துவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இது குறித்த போலீசார் நடத்திய விசாரணையில் தான் பல முக்கிய தகவல்கள் தெரிய வந்தது.
கடனை திரும்பச் செலுத்தவில்லை:
அதாவது அந்த பெண்ணின் கணவர் கடன் வாங்கியுள்ளார். இருப்பினும், அதனை அவர் திரும்பச் செலுத்தத் தவறியதாகத் தெரிகிறது. வட்டியும் கூட உரிய நேரத்தில் செலுத்த அவர் தவறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கந்துவட்டிக்காரன், கடன் வாங்கிய நபரைக் கத்தியைக் காட்டி கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளான்.
மேலும், அவர் கண் முன்னாலேயே அவரது மனைவியைக் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அது மட்டுமின்றி இந்த கொடூரத்தை அவன் தனது மொபைலில் ரெக்கார்டும் செய்து வைத்துள்ளான். அதன் ஒரு பகுதியை சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளான். அதன் பின்னரே பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

வழக்குப்பதிவு:
குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்து அடுத்தகட்ட விசாரணை நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் மீது பலாத்கார வழக்கு மட்டுமின்றி ஐடி பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
நமது நாட்டில் இதுபோல பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. ஆணாதிக்க மனோபாவத்தில் நடத்தப்படும் இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க கடுமையான சட்டங்கள் தேவை என்பதைப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், பெண்களை தங்கள் உடைமைகளாகப் பார்க்கும் போக்கை ஆண்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.