- சென்னை வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாட்டின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் வலு இழக்கவில்லை. எனவே கரையைக் கடக்கும் போது கனமழை இருக்கலாம் என வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. நேற்று பகலில் கொட்டிய மழை, பின்னர் இரவில் படிப்படியாக குறைந்தது. சென்னை, அதன் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தெற்கு ஆந்திரா நோக்கி நகர்வதால் அதி கனமழையில் இருந்து சென்னை மற்றும் சென்னையின் அண்டை மாவட்டங்கள் தப்பித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நாளைக்கும் ரெட் அலர்ட் விடுத்துள்ளார் வானிலை ஆய்வு மைய மண்டல தலைவர் பாலச்சந்திரன். வானிலை ஆய்வு மைய மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பைவிட அதிகமாக பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரியில் தொடங்கியது முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் பதிவான மழையின் அளவு 13.8 செ.மீ. இந்த காலகட்டத்தின் இயல்பு அளவு 7.1 செ.மீ. எனவே இது இயல்பை விட 94% அதிகம்.
சென்னைக்கு 280 கி.மீ தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளது. 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை சென்னை அருகே கரையைக் கடக்கும். இன்னும் கரையைக் கடக்காததால் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் அதிகபட்சமாக 30 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ரெட் அலர்ட் என்றால் எல்லா இடங்களிலும் 20 செ.மீ அளவுக்கு மேல் கனமழை பெய்யும் என்று அர்த்தம் இல்லை. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் வலு இழக்கவில்லை. இன்னும் கடலில் தான் இருக்கிறது. எனவே கரையைக் கடக்கும் போது ஓரிரு இடங்களில் கனமழை இருக்கலாம். இன்னும் 4 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது. தொடர்ந்து கண்காணித்து அறிவிக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.
நாளை வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
அக்டோபர் 18 ஆம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், வேலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/the-new-bus-station-in-villupuram-has-started-to-look-like-a-pond-again/
அக்டோபர் 19 முதல் அக்.20 ஆம் தேதி வரையில், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அக்டோபர் 21 முதல் அக்.22 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.