நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள வயல்வெளி பகுதியில் இன்று பெரிய கரடி உலவுவதாக விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து திருநெல்வேலி வனச்சரக அலுவலர் தலைமையில் வனக்குழுவினர் மற்றும் நாங்குநேரி வட்டாச்சியர் உள்ளிட்ட வருவாய் துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர் . அப்போது அங்குள்ள வாழை வயல்களுக்குள் கரடி பதுங்கி இருப்பது உறுதியானது.
இதனை அடுத்து நேற்று மாலை நெல்லையிலிருந்து கரடியைப் பிடிக்க சிறப்பு கூண்டு வர வழைக்கப்பட்டது. அந்த கூண்டில் கரடிக்கு விருப்பமான பலாப்பழத்தை வைத்து கரடியை பிடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாழை வயல்களுக்குள் கரடி பதுங்கி இருப்பதால் விவசாயிகள் வயல்களுக்கு செல்ல அச்சமடைந்துள்ளனர்.
மேலும் குடியிருப்பு பகுதியை ஒட்டி உள்ள வயல்வெள்ளிகளில் இருந்து கரடி எந்நேரமும் ஊருக்குள் வரலாம் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை அடுத்து வனத்துறையினரும் விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர். இச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.