தென்பெண்ணையாறு, கெடிலம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் வினாடிக்கு 5500 கன அடி நீர் கடலூர் கடலில் வீணாக கலக்கிறது.
தமிழகத்தில் கடந்த மாதம் 21ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் கடந்த 13ஆம் தேதி இரவு முதல் நேற்று வரை கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. ஆறுகள், ஓடைகள் மற்றும் நீர்வரத்து வாய்க்கால்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே தொடர் கனமழையால் ஆறுகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் கடலூர் தென்பெண்ணையாற்றில் வினாடிக்கு 2500 கன அடி தண்ணீர் சென்ற நிலையில் நேற்று படிப்படியாக உயர்ந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்கிறது.

இதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தடுப்பணையுடன் கூடிய தரைப்பாலம் மருதாடு, விஸ்வநாதபுரம் உள்பட தென் பண்ணையாற்றில் குறுக்கே உள்ள 6 தரைப்பாலங்களும் மூழ்கியதால் அந்த வழியாக பொதுமக்கள் இறங்குவதை தடுக்கும் வகையில் இருபுறமும் போலீசார் தடுப்புகள் வைத்து பாதையை அடைத்துள்ளனர். தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் 5 ஆயிரம் கன அடி தண்ணீரும் தாழங்குடாவில் உள்ள முகத்துவாரம் வழியாக கடலில் வீணாக கலந்து வருகிறது. இதேபோல் கெடிலம் ஆற்றின் குறுக்கே உள்ள அனைத்து தடுப்பணைகளும் நிரம்பி வழிகின்றன.

இதனால் ஆற்றின் இருகறைகளையும் தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் செல்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் கொள்ளிடம், வெள்ளாறு, வடவாறு, மேல் பரவனாறு, கீழ்ப்பரவனாறு உள்ளிட்ட ஆறுகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆற்றங்கரைக்கு பொதுமக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் கெடிலம் மற்றும் தென்பெண்ணையாற்றில் கூடுதலாக தடுப்பணைகளை கட்டி தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.