தமிழகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 7-ந் தேதி சட்டமன்றத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்த அறிவிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அன்று அண்ணா பிறந்த நாளில் மதுரையில் இத்திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். இத்திட்டம் தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 1.14 லட்சம் தொடக்கப்பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ரூ.404 கோடியில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊரகப் பகுதி மற்றும் பேரூராட்சி, நகர்புற பகுதிகளில் உள்ள 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 31,008 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தினை கடந்த 25-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள தொடக்கப்பள்ளியில் தொடங்கி வைத்தார். இத்திட்டம் குறித்து பிரபல நாளிதழ் ஒன்று சர்ச்சைக்குரிய வகையில் செய்தி வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரபல நாளிதழ் வெளியிட்ட செய்தியை மேற்கோள் காட்டி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதையடுத்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல். கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல் எனக் கூறியுள்ளார்.