திரெளபதி அம்மன் கோயில்
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி தீமிதி திருவிழாவின் போது பட்டியல் வகுப்பினர் சாமி கும்பிட கோயிலுக்குள் சென்றதால் மற்றொரு சமூகத்தினர் பட்டியல் சமூக மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்ட்பாக வளவனூர் காவல்துறையினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

பேச்சுவார்த்தை
இந்நிலையில் பட்டியலின மக்களை திரெளபதி அம்மன் கோயிலுக்குள் அழைத்து செல்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த இரு சமூக மக்களிடையேயும் 8 முறை சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் திரெளபதி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்களை அனுமதிக்க மாட்டோம் என ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பிடிவாதமாக இருந்தனர். மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் நடத்திய 8 சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிந்தது.
மற்றொருபுறம் தங்களை கோயிலுக்குள் செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால் மேல்பாதி கிராமத்தில் உள்ள இரு சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடையே எந்த நேரத்திலும் மோதல் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் நிலவியது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை
சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டதால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி திரெளபதி அம்மன் கோயிலை வருவாய் துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.பூட்டி சீல் வைக்கப்பட்ட திரெளபதி அம்மன் கோயிலை திறக்க கோரி ஒரு தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கில் கோயிலை திறந்து பொதுமக்களை அனுமதிக்காமல் ஒரு கால பூஜையை மட்டும் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி வரும் 22ஆம் தேதி திரெளபதி அம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி கோயிலை திறந்து ஒரு கால பூஜையை மட்டும் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.ஒரு வழியாக கோயில் பிரச்சனை தீர்வுக்கு வந்தது.