தமிழகத்திற்கான காவிரி நீரைப் பெற்றுத்தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜி.கே.வாசன்

2 Min Read
ஜி.கே.வாசன்

தமிழகத்திற்கான காவிரி நீரைப் பெற்றுத்தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிடுவது குறித்து காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைப்பதை காவிரி மேலாண்மை ஆணையம் செயல்படுத்த வேண்டும். கர்நாடக அரசின் பிடிவாதப்போக்கை முறியடித்து தமிழகத்திற்கான காவிரி நீரைப் பெற்றுத்தர மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கர்நாடக அரசிடம் இருந்து தமிழகத்திற்கான காவிரி நீரைப் பெற்றுத்தர தமிழக அரசின் நடவடிக்கைள் போதுமானதாக அமையவில்லை என்பதால் இனியும் காலம் தாழ்த்தாமல் உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.கர்நாடக அரசு தமிழகத்திற்கு ஜனவரி மாதம் வரை நிலுவையில் உள்ள 90.532 டி.எம்.சி நீரை திறந்திருக்க வேண்டும்.மேலும் ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்கு கர்நாடக அணைகளில் இருந்து குறைந்த பட்சம் 5.26 டி.எம்.சி தண்ணீராவது திறக்க வேண்டும்.

ஜி.கே.வாசன்

ஆனால் கடந்த 18-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் பிப்ரவரி மாத இறுதிக்குள் தமிழகத்துக்கு 4 டி.எம்.சி நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.தினமும் ஆயிரம் கன அடிக்கும் குறைவான நீரையே கர்நாடகா திறந்து வந்தது. ஜனவரி மாதம் வரை 90.532 டிஎம்சி தண்ணீரைக் கர்நாடகா நிலுவையில் வைத்திருந்த சூழலில் மூன்று மாதங்களுக்குப் பிறகு நேற்று பிப்ரவரி 1-ம் தேதி டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-வது கூட்டம் நடைபெற்றது. இதில், கர்நாடகம், தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநில நீர்வளத்துறை செயலாளர்கள், காவிரி தொழில்நுட்ப குழுவினர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பிப்ரவரி மாதத்துக்குள் 2.5 டி.எம்.சி தண்ணீரைத் தமிழ்நாட்டிற்கு காவிரியில் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

கடந்த மாதம் 18ம் தேதி தமிழகத்திற்கு பிப்ரவரியில் 5.26 டி.எம்.சி நீரை திறக்க காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்த நிலையில், காவிரியில் தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் இப்போது உத்தரவிட்டுள்ளது. இந்த 2.5 டி.எம்.சி நீர் போதுமானதல்ல, காரணம் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் வரை திறந்துவிட வேண்டிய தண்ணீரையே இன்னும் முழுமையாக திறக்காத நிலையில் 2.5 டி.எம்.சி நீர் போதுமானதல்ல. இருப்பினும் இந்த 2.5 டி.எம்.சி நீரையாவது உரிய காலத்தில் திறக்க கர்நாடக அரசை மத்திய மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும். மேலும் உச்ச நீதிமன்றம், காவிரி ஒழுங்காற்றுக்குழு, காவிரி மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் உத்தரவுப்படி கர்நாடக அரசிடம் இருந்து தமிழகத்திற்கான காவிரி நீரைப் பெற்றுத்தர மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a review