நாங்கள் தேர்தல் நடத்த தயார்., சுப்ரீம் கோர்ட்டுக்கு மத்திய அரசு தகவல்.!

0
68
சுப்ரீம் கோர்ட் - ஜம்மு-காஷ்மீர்

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி ஜம்மு-காஷ்மீரும், லடாக்கும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.

காஷ்மீருக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக பலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் கடந்த 2-ந் தேதி தொடங்கியது. நாள்தோறும் விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபல் ஆஜராகியுள்ளார்.  

மத்திய அரசு சார்பில் சொல்சிடர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடி வருகிறார். இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் தேர்தலை நடத்த தயார் என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடந்தது. அப்போது மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:- ஜம்மு-காஷ்மீரில் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்த தயாராக உள்ளோம்.

தேர்தல் ஆணையம்தான் இனி தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் இருக்கிறது. இந்த பணி முடிவடைய ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் ஆகலாம். ஜம்மு-காஷ்மீர் தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்படும். முதலில் பஞ்சாயத்து அளவிலும், அதை தொடர்ந்து நகராட்சி அளவிலும் பின்னர் சட்டசபை தேர்தலும் நடைபெறும்.  

லடாக் மலை மேம்பாட்டு கவுன்சிலுக்கான தேர்தல் , லே பகுதியில் முடிந்து விட்டது. கார்கில் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும். ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து எப்போது தரப்படும் என காலவரையறை சொல்ல முடியாது. முழு மாநில அந்தஸ்து வழங்கப்படுவதற்கு முன்பாக ஜம்மு காஷ்மீரை தயார்படுத்த வேண்டியுள்ளது. ஜம்மு-காஷ்மீர், லடாக் என யூனியன் பிரதேசங்களாக உருவாக்கியது தற்காலிக நடவடிக்கைதான்.

370-வது பிரிவை நீக்கிய பிறகு 2018 உடன் ஒப்பிடும்போது தீவிரவாதம் தொடர்பான செயல்கள் 45.2 சதவீதம் குறைந்துள்ளது. ஊடுருவல் 90.2 சதவீதம் குறைந்துள்ளது. இவ்வாறு மத்திய அரசு வக்கீல் துஷார் மேத்தா கூறினார். மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான கபில்சிபல் பயங்கரவாதிகள் தொடர்பான மத்திய அரசின் தவலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பயங்கரவாத சம்பவங்கள் குறித்த மத்திய அரசின் தகவல்கள் 370-வது பிரிவின் அரசியலமைப்பின் தீர்ப்பில் சிக்கலை ஏற்படுத்தாது என்று கபில் சிபலிடம் உறுதி அளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here