அ.தி.மு.க.வில் தலைமை பதவி யாருக்கு என்கிற போட்டியில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று அ.தி.மு.க. பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்டு உள்ளார். இதைத் தொடர்ந்து தனி அணியாக செயல்பட்டு வரும் பன்னீர்செல்வம் அடுத்து என்ன செய்யப் போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக அவர் விரைவில் அடுத்தடுத்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. ஓ.பி.எஸ். தொடங்கப்போகும் புதிய கட்சிக்கு அம்மா தி.மு.க. புரட்சித் தலைவி அ.தி.மு.க. உள்ளிட்ட பெயர்களை வைப்பதற்காக பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது பிரசார பயணத்தை காஞ்சிபுரத்தில் இன்று மாலை தொடங்குகிறார். இதற்காக காஞ்சிபுரம் களியனூரில் அருகே பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசுகிறார். 20 ஆயிரம் பேர் அமரும் வகையில் பொதுக்கூட்ட மேடை முன்பு இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்பதற்காக பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதன் காரணமாக வழிநெடுக ஓ.பி.எஸ்.சை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. காஞ்சிபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இன்று பிற்பகலில் காஞ்சிபுரம் செல்லும் பன்னீர்செல்வம் அங்குள்ள அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்று மாலை அணிவித்து வணங்குகிறார். பின்னர் பொதுக்கூட்ட மேடைக்கு சென்று சிறப்புரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள முன்னணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள். இன்றைய பிரசார பயண பொதுக்கூட்டத்தின்போது ஓ.பன்னீர்செல்வம் தனது எதிர்கால திட்டங்கள் தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக ஓ.பி.எஸ். அணியின் முன்னணி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:- அ.தி.மு.க.வில் உள்ள உண்மை தொண்டர்கள் எங்கள் பக்கமே உள்ளனர். அவர்களை வழிநடத்துவதற்காக தனி அமைப்பை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கான தொடக்கமாகவே இன்றைய பொதுக்கூட்டம் அமையும்.
இந்த கூட்டத்தில் பன்னீர்செல்வம் என்ன பேசப் போகிறார் என்பதை அரசியல் களமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் முக்கிய காரணமாக இருப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் இன்று பிரசார பயணத்தை தொடங்க உள்ள ஓ.பன்னீர்செல்வம் அடுத்த வாரம் முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று இதே போன்று பிரசார பயண பொதுக்கூட்டங்களில் பங்கேற்க இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கான பயணத்திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. வருகிற 9-ந் தேதி பன்னீர்செல்வத்தின் மனைவி 2-வது ஆண்டு நினைவு நாளாகும். அது முடிந்த பிறகு பன்னீர்செல்வம் பிரசார பயணத்தில் தீவிரம் காட்ட உள்ளார். அப்போது தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்களை திரட்டி தனது பலம் என்ன என்பதையும் அவர் காட்ட இருக்கிறார். இந்த பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் செய்துள்ளார். இதன் காரணமாக காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் பொதுக்கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.