இயற்கைக்காகவும், கடலூர் மாவட்ட உழவர்களுக்காகவும் குரல் கொடுத்த உயர்நீதிமன்ற நீதிபதிக்கு பாராட்டு, நன்றி என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில்,”என்.எல்.சி தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, நிலத்தை கைப்பற்றுவதற்காக வயலில் விளைந்து நின்ற பயிர்களை எந்திரங்களைக் கொண்டு அழித்த என்.எல்.சி நிறுவனத்திற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறார்.
‘’ நெல் பயிரிடப்பட்டிருந்த வயல்களில் எந்திரங்களை இறக்கி பயிர்களை அழித்ததை ஏற்க முடியாது. வாடிய பயிர்களை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார் வாழ்ந்த பூமியில் இப்படி நடப்பதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பயிர்கள் அழிக்கப்படும் காட்சியைக் கண்ட போது எனக்கு அழுகை வந்தது. பயிர்கள் அறுவடை செய்யப்படும் வரை இரு மாதங்கள் என்.எல்.சியால் பொறுத்துக் கொள்ள முடியாதா?
வயல்களை எல்லாம் அழித்து மீத்தேன்,நிலக்கரி எடுத்தால் அதனால் ஏற்படும் வெற்றிடத்தை எதைக் கொண்டு நிரப்பப் போகிறோம். நமது தலைமுறையிலேயே நாம் பஞ்சத்தை பார்க்கப் போகிறோம். அரிசிக்கும், காய்கறிகளுக்கும் மக்கள் அடித்துக் கொள்ளப் போவதை நாம் பார்க்கத்தான் போகிறோம். என்.எல்.சி நிறுவனம் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை. நிலக்கரி அவர்களுக்கு பயன்படாது. இது தான் எனது கருத்து” என்று கூறியுள்ளார்.
நீதியரசர் தண்டபாணியின் கருத்துகள் உண்மையானவை. என்.எல்.சியால் பயிர்கள் அழிக்கப்பட்ட சிக்கலில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை நிலைப்பாட்டை நீதியரசர் அப்படியே வழிமொழிந்திருகிறார். பயிர்கள், சுற்றுச்சூழல், உணவுப் பாதுகாப்பு குறித்த அக்கறையுடன் இந்தக் கருத்துகளைத் தெரிவித்த நீதிபதிக்கு நான் எனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீதிபதியின் மனதை தைத்த நிகழ்வுகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் இதயங்களையும் தொட வேண்டும். பயிர்களை அழிப்பதும் நிலத்தை பறிப்பதும் பாவம் என்பதை அவர்கள் உணர வேண்டும். அதற்கானத் திறனை பகுத்தறிவு வழங்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.