பாப்பாநாடு பகுதியில் கடந்த 12ம் தேதி, 23 வயது நிரம்பிய பட்டதாரி இளம் பெண்ணை,அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு பாப்பாநாடு கடைத்தெரு பகுதியில்,வணிகர்கள்,கிராம மக்கள், பெண்கள், அனைத்து கட்சியினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு காவல் சரகம் கிராமத்தைச் சேர்ந்தவர் 23 வயது பி.எஸ்.சி., பட்டதாரி இளம்பெண். இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை சுமைதூக்கும் தொழிலாளி, தாய் கூலி தொழிலாளி.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, விடுமுறைக்காக இளம்பெண் ஊருக்கு வந்தார். கடந்த 12ம் தேதி இளம்பெண் மட்டுமே வீட்டில் தனியாக இருந்த போது, தெற்குக்கோட்டையை சேர்ந்த கவிதாசன்(25) இளம்பெண் வீட்டுக்கு வந்து, அவரிடம் பேச வேண்டும் என கூறி அழைத்துள்ளார்.
அந்த பெண் வர மறுத்துள்ளார். இதனால், இளம்பெண்ணை வலுகட்டாயமாக, ஆள் நடமாட்டம் இல்லாத கொட்டகை பகுதிக்கு இழுத்து சென்றுள்ளார். அங்கு கவிதாசனின் நண்பர்களான பாப்பாநாடு பகுதியை சேர்ந்த திவாகர் (26), பிரவீன் (20,) 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் இருந்துள்ளனர்.
அந்தப்பெண் அங்கிருந்து தப்பிக்க முயன்ற போது, நான்கு பேரும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதை அவர்களது செல்போனில் வீடியோவாக பதிவும் செய்துள்ளனர்.

பிறகு, 12ம் தேதி இரவு பாதிக்கப்பட்ட பெண் ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸில், கவிதாசன் அவர்கள் நண்பர்கள் மீது புகார் அளித்தார். இதனையடுத்து போலீஸார் கவிதாசன், திவாகர், பிரவீன் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், இளம்பெண்ணை அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. தற்போது, பாதிக்கப்பட்ட பெண் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், ஒரத்தநாடு ஏ.எஸ்.பி., சகுனாஸ் ஆகியோர் இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், கவிதாசன் மீது கடந்த 2020ம் ஆண்டு விவசாயி ஒருவரை கொலை செய்த வழக்கு உள்ளது.
இதே போல பிரவீன் மீது கஞ்சா வழக்குகள் உள்ளன. கைது செய்யப்பட்டுள்ள சிறுவன் சிறார் சீர்த்திருத்த பள்ளியிலும், மற்ற மூன்று நபர்கள் நீதிமன்ற காவிலில் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
கூட்டு பாலியல் பலாத்காரம் விவகாரத்தில் விடுபட்டுள்ள மற்ற குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் பாப்பநாடு பகுதியில் கஞ்சா புழக்கத்தை உடனே ஒழித்திட கோரியும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் செய்ய போவதாக அறிவித்தனர் .
இந்நிலையில்,பாப்பாநாடு கடைத்தெரு பகுதியில்,வணிகர்கள்,கிராம மக்கள்,பெண்கள்,அனைத்து கட்சியினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாப்பா நாட்டில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு கடையடைப்பு போராட்டமும் நடைபெற்று வருகிறது.இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது .