Manipur riot : மணிப்பூர் கலவரத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளனர்

2 Min Read
ஆலோசனை

மணிப்பூர் வடகிழக்கு இந்தியாவில் உள்ள ஒரு மாநிலமாகும். மணிப்பூர் முன்னர் பிரித்தானிய இந்தியாவில் 1947 வரை முடியாட்சியுடன் கூடிய ராச்சியமாக விளங்கியது. 1949-இல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1956 வரை இந்தியாவின் ஒன்றியப் பகுதியாக இருந்தது. 1972-இல் தனி மாநிலமானது.

- Advertisement -
Ad imageAd image

இம்பாலை தலைநகரமாக கொண்டது. மணிப்பூர், இந்திய மாநிலங்களான நாகாலந்து,மிஸோரம,அஸ்ஸாம் என்பவற்றை முறையே, வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளிலும், கிழக்கில் மியாமருடன் அனைத்துலக எல்லையொன்றையும் கொண்டுள்ளது.

இந்த மாநிலத்தில் பெரும்பாலான் குடிமக்கள் மைத்தி (Meitei) இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் (Meiteilon) மணிப்பூரி என்றழைக்கப்படும் தம் பரம்பரை மைத்தி மொழியைப் பேசி வருகின்றனர். இம்மொழி 1992 ம்  ஆண்டில் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில்  ஒன்றாகச் சேர்க்கப்பட்டது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் எஸ்.டி. அந்தஸ்து கோரும் மைத்தி சமுதாய மக்களுக்கு எதிராக குகி, நாகா உள்ளிட்ட பழங்குடி மக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இதன் காரணமாக கடந்த 3-ம் தேதி மணிப்பூரில் மிகப்பெரிய அளவில் கலவரம் வெடித்தது. அந்த மாநிலத்தில் 10 மலைப் பகுதி மாவட்டங்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் மைத்தி சமுதாய மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டன. இதற்கு பதிலடியாக மைத்தி சமுதாய மக்களும் வன்முறையில் இறங்கினர். மாநில போலீஸாரால் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. உடனடியாக ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினர், சிஆர்பிஎப் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். கலவரக்காரர்களை கண்டதும் சுட மணிப்பூர் அரசு உத்தரவிட்டது.

கடந்த 4 நாட்களில் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. சுமார் 20,000 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கடந்த 3-ம் தேதி முதல் இதுவரை கலவரத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் இன்று நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. மணிப்பூரில் பதற்றம் நீடிப்பதால் அந்த மாநிலத்தில் மட்டும் நீட் நுழைவுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. ராணுவம், துணை ராணுவம், போலீஸாரின் நடவடிக்கைகளால் மணிப்பூரில் படிப்படியாக அமைதி திரும்பி வருகிறது என்று மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மணிப்பூர் கலவரத்தில் நாகா, குகி பழங்குடியினத்தை சேர்ந்த சில தீவிரவாத குழுக்களுக்கு தொடர்பிருப்பதாக மாநில போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சூழலில் சாய்டோன், டார்பாங் ஆகிய பகுதிகளில் போலீஸார் நேற்று முன்தினம் இரவு நடத்திய என்கவுன்ட்டர்களில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தலைமையில் தலைநகர் இம்பாலில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக, காங்கிரஸ், நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட், ஆம் ஆத்மி, சிவசேனா கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மாநிலம் முழுவதும் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

Share This Article
Leave a review