பத்திரிகையாளர் ஃபிலிக்ஸ் ஜெரால்ட் மீதான காவல்துறையின் அதீத நடவடிக்கையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.கைது செய்யப்பட்டுள்ள ஃபிலிக்ஸ் ஜெராட்டுக்கு சட்டப்பூர்வமாக கிடைக்க வேண்டிய உரிமைகளை மறுக்கக் கூடாது என்றும் வலியுறுத்துகிறோம்.

ரெட்பிக்ஸ்
ரெட்பிக்ஸ் என்ற டிஜிட்டல் ஊடகத்தை நடத்தி வரும் மூத்த பத்திரிகையாளர் ஃபிலிக்ஸ் ஜெரால்ட் கடந்த 12.05.24 அன்று டெல்லியில் கைது செய்யப்பட்டார். பெண் காவலர்களை கண்ணியக்குறைவாக பேசும் வகையிலான நேர்காணலை நடத்தியதற்காகவும் அதை பதிவேற்றம் செய்ததற்காகவும் அவர் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.காவல்துறையோ, பத்திரிகைத்துறையோ அல்லது வேறு எந்த துறையாக இருந்தாலும் அதில் பணியாற்றும் பெண்களை இவ்வாறு கேவலமாக பேசுபவர், அதை ஆமோதிப்பவர், அவ்வாறு பேசுவதற்கு அனுமதியளிப்பவர் என யாராக இருந்தாலும் அவர் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அந்த வகையில் ஃபிலிக்ஸ் ஜெரால்ட் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதில் எந்த தவறும் இல்லை.
எஸ்.வி.சேகர்
ஆனால், வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு ஃபிலிக்ஸ் ஜெரால்ட் கைது செய்யப்பட்ட விதமும், அவருடைய மனைவி குற்றம்சாட்டும் வகையில் அவர் எங்குள்ளார் என்பதைக் கூட காவல்துறை தெரிவிக்காததும், இதற்கெல்லாம் உச்சபட்சமாக (14.05.24) பத்திரிகையாளர் ஃபிலிக்ஸ் ஜெரால்ட் வீடு மற்றும் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையையும் காவல்துறையின் அதீதி நடவடிக்கையாக கருதும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் அதை வன்மையாக கண்டிக்கிறது.கடந்த காலங்களில், சமூக வலைதளங்களில் பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக சமூக விரோத சக்திகள் அவதூறு பரப்பியது தொடர்பான பல புகார்கள் காவல்துறையிடம் அளிக்கப்பட்டுள்ளன. அந்த நபர்கள் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. உதாரணத்திற்கு, பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாக பதிவிட்ட பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகரை காவல்துறை கைது செய்யவில்லை என்பதுடன் அதற்கான முயற்சியைக் கூட எடுக்கவில்லை.
இந்நிலையில், பெண் காவலர்கள் குறித்து தரக்குறைவான கருத்தை பதிவிட்ட வழக்கில் காவல்துறை இவ்வளவு வேகமாக செயல்பட்டுள்ளது ஒரு வகையில் வரவேற்கத்தக்கது என்றாலும், இதுபோன்ற வழக்கில் பாரபட்சம் காட்டப்படுவது அப்பட்டமாக தெரிகிறது. அத்துடன், ஃபிலிக்ஸ் ஜெரால்டை டெல்லிக்கு சென்று கைது செய்ததும், அவர் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தியதும் அவர் மீதான குற்றச்சாட்டையும் தாண்டி காவல்துறை மேற்கொள்ளும் பழிவாங்கல் நடவடிக்கை என்றே எண்ணத்தோன்றுகிறது.
கண்டிக்கிறது
இதற்கிடையில், ரெட்பிக்ஸ் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சோதனையில் கேமரா மற்றும் கணினிகளையும் காவல்துறை கைப்பற்றியுள்ளது. காவல்துறையின் இந்த நடவடிக்கை ரெட்பிக்ஸ் ஊடகத்தை இயங்கவிடாமல் தடுக்கும் முயற்சியாகவே மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கருதுகிறது.ஆகவே, ஃபிலிக்ஸ் ஜெரால்டு மீதான காவல்துறையின் இந்த அதீத நடவடிக்கையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.கைப்பற்றப்பட்ட கேமரா மற்றும் கணினிகளை காவல்துறை உடனே ஒப்படைக்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் காவல்துறையை வலியுறுத்துகிறது.
ஒருதலைபட்சம்
ஃபிலிக்ஸ் ஜெரால்டுக்கு சட்டப்பூர்வமாக கிடைக்க வேண்டிய உரிமைகளை காவல்துறை மறுக்கக் கூடாது எனவும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.ஃபிலிக்ஸ் ஜெரால்ட் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் தன்மைக்கு மீறி, காவல்துறை ஒருதலைபட்சமாக நடந்துகொள்ளக் கூடாது என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.