தேர்தலை புறக்கணித்து புறமுதுகிட்டு ஓடும் பழனிசாமிக்கும் தகுந்த பாடம் புகட்டுக! டிடிவி தினகரன்

2 Min Read
டி.டி.வி தினகரன்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கணக்கை தொடங்கிடும் தேர்தலாக அமையட்டும் என கட்சியினருக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் வரும் ஜூலை 10 ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுவதென ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு அக்கட்சியின் சார்பில் C.அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கச்சத்தீவை தாரைவார்த்ததில் தொடங்கி தமிழ்நாட்டின் ஜீவாதாரமான காவிரி, முல்லைப்பெரியாறு அணை விவகாரம், நாள்தோறும் அரங்கேறும் சட்டம், ஒழுங்கு சீர்கேடுகள், இளையசமுதாயத்தை குறிவைக்கும் போதைப் பொருட்களின் கலாச்சாரம், என அனைத்து வழிகளிலும் தமிழக மக்களுக்கு துன்பம் இழைத்துக் கொண்டிருக்கும் தி.மு.க. விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் மீண்டும் வெற்றிபெறத் துடிப்பது தங்களை வளப்படுத்திக் கொள்வதற்காகத் தானே தவிர, மாநிலத்திற்கோ மக்களுக்கோ நல்லது செய்வதற்காக அல்ல என்பதை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது.

TTV தினகரன்

ஆட்சி அதிகாரத்தை சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஆளும் தி.மு.க.வை எதிர்கொள்ளமுடியாமல் தேர்தல் களத்திலிருந்து வெளியேறியிருப்பதன் மூலம் பழனிசாமியை தமிழக மக்கள் ஏற்கனவே புறக்கணித்துவிட்டார்கள் என்பது தெள்ளத்தெளிவாகிறது. அராஜகத்திற்கும் அத்துமீறல்களுக்கும் அடையாளமாகிப் போன தி.மு.க.விற்கும், மக்களை சந்திக்கமுடியாமல் தேர்தலை புறக்கணித்து புறமுதுகிட்டு ஓடும் பழனிசாமிக்கும் தகுந்த பாடம் புகட்டும் வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் C.அன்புமணி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.

வேரின்றி மரமில்லை என்பதைப் போல தொண்டர்களின்றி நானில்லை என்று சொல்லும் அளவிற்கு தன்னலம் கருதாத தொண்டர்களை பெற்றிருப்பது நான் செய்த பாக்கியமாகவே கருதுகிறேன். நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஜாதி மதங்களை கடந்து ஆளுங்கட்சிக்கும், ஆண்ட கட்சிக்கும் சவால் விடும் அளவிற்கு கழகம் தொடர்ந்து பயணிக்கிறது என்றால் அதற்கு என் உயிரினும் மேலான தொண்டர்கள் மட்டுமே காரணம். ஆகவே, ஆளும் தி.மு.க.வை தீரத்துடன் எதிர்கொண்டு தீவிர தேர்தல் களப்பணியின் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்திடும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில்தேர்தல் பணிக்குழு அமைக்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a review