நேர்மையான விஏஓக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தமிழ்நாடு அரசு விஏஓக்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டு கைத்துப்பாக்கி வழங்க வேண்டும் என தமிழ்நாடு விஏஓ சங்கம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளது.
மேலும் கிராம் நிர்வாக அலுவலர்கள் அளிக்கும் புகாருக்கு காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ன கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர்களுக்கான அலுவலகங்களை ஊரின் ஒதுக்குப்புறம் கட்டித் தராமல் மக்கள் வசிக்கும் பகுதிகளில் கட்டித்தரவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக லூர்தர் பிரான்சிஸ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.கடந்த சில தினங்களுக்கு முன்பு கிராமப் பகுதிகளில் தாமிரபரணி அருகில் சிலர் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக ஒரு தகவல் வந்துள்ளது. அதனை தொடர்ந்து அந்த பகுதியில் ரோந்து பணியில் செல்லும்போது தாமிரபரணி ஆற்றில் இருந்து ராமசுப்பு என்பவர் இருசக்கர வாகனத்தில் ஆற்று மணலை கடத்திச் சென்றுள்ளார்.
அப்போது கிராம நிர்வாக அலுவலரை பார்த்தவுடன் ஆற்று மணலை போட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்று உள்ளார்.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது சம்பவ இடத்துக்கு வந்த இரண்டு பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு என் மீது எப்படி காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என தெரிவித்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
படுகாயம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கிராம நிர்வாக அலுவலகத்துக்குள் புகுந்து அதிகாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல், கிராம நிர்வாக அலுவலர்கள் மத்தியில் பயத்தினை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கிராம் நிர்வாக அலுவலர்கள் சங்கம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.