தமிழக ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்றதாக இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் பல்கலைக்கழக அரங்கில் இருந்து போலீசார் வெளியேற்றினர்.
தஞ்சாவூரில் இன்று தமிழ் பல்கலைக்கழகத்தில் 13வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது . இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் கலந்து கொள்ள தஞ்சாவூர் வருகை தரும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்துவதாக ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்திருந்தனர்.
அதன்படி தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏராளமானோர் திரண்டனர்.
அப்போது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக கூறி அவரை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆளுநருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டிய சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல் இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் அரவிந்த்சாமி தமிழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் எம்.பில் பட்டம் பெறுவதற்காக விழா அரங்கத்தில் அமர்ந்திருந்தார். இந்திய மாணவர் சங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தது என்ற நிலையிலும் அரவிந்த்சாமி ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி அல்லது கோஷம் எழுப்புவார் என்று உளவுத்துறை எச்சரித்த நிலையில் அவரை போலீசார் பட்டமளிப்பு விழா அரங்கில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினார். முன்னதாக அவர் கருப்பு உடை அணிந்து வந்திருந்ததாலும் அவர் கருப்புக்கொடி உள்ளிட்ட வேறு ஏதேனும் பொருட்கள் வைத்திருக்கிறாரா என்ற சுமார் ஒரு மணி நேரம் போலீசார் அவரை தனி அறையில் வைத்து சோதனை நடத்தினர்.