கவர்ச்சிகரமான அறிவிப்புகளை மட்டுமே கொண்ட பட்ஜெட் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். மதுக்கடைகளை மாநிலத்தின் வருவாய்க்கான முதன்மை வாய்ப்பாகக் கொண்டிருப்பது மிக மோசமான நிர்வாகச் செயல்பாடாக விமர்சித்துள்ள சீமான், மாதந்தோறும் மின் கணக்கீடு அறிவிப்பு பற்றி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக அரசால் வெளியிடப்பட்டுள்ள 2023 -24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையானது வெற்று அறிவிப்புகளை மட்டுமே கொண்டு, மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வழிவகை செய்யாத வகையில் அமைந்திருப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது.
குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படுமெனத் தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு, இப்போது தகுதிவாய்ந்த குடும்பத்தலைவிகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு மட்டுமே உரிமைத்தொகையை வழங்குவோம் என அறிவித்திருப்பது அப்பட்டமான மோசடித்தனமாகும்.
கடந்த நிதியாண்டில், 45,000 கோடி ரூபாய் மதுக்கடைகளின் மூலம் வருமானம் கிடைத்துள்ளதெனக் கூறி, அதனை 50,000 கோடி ரூபாயாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பது வெட்கக்கேடானது.

பெரும் பெரும் பொருளாதார நிபுணர்களைக் கொண்ட குழுவை அமைத்த திமுக அரசு, அவர்கள் மூலம் மாற்றுப ்பொருளாதாரப் பெருக்கத்திற்கான வழிவாய்ப்புகளைத் தேடாது, மதுக்கடைகளையே வருவாய்க்கான முதன்மை வாய்ப்பாகக் கொண்டிருப்பது மிக மோசமான நிர்வாகச் செயல்பாடாகும்.
சென்னையில் மொழிப்போர் ஈகியர்களான நடராசன், தாளமுத்துவுக்கு நினைவிடம் அமைக்கப்படுமென அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். நிதிநிலை அறிக்கையில், நிதிப்பற்றாக்குறை குறைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும், மாநிலத்தின் கடன் சுமை ஒரு இலட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இத்தோடு, போக்குவரத்துக்கென்று புதிய பேருந்துகள் வாங்குவது உள்ளிட்ட கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் செயல்படுத்தப்படவில்லை. மொத்தத்தில், கவர்ச்சிகரமான அறிவிப்புகளை மட்டுமே கொண்ட வழமையான நிதிநிலை அறிக்கையாக இருக்கிறதே தவிர , மக்கள் நலனையும், அவர்களது வாழ்வியல் மேம்பாட்டையும் முன்வைக்கிற திட்டங்கள் எதுவுமில்லை என 2023- 24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மதிப்பிடுவதாக தெரிவித்துள்ளார்.