தலையங்கம்…
சாதாரணமாக ஒரு நாளைக்கு 24 மணி நேரம். அதில் 8 மணி நேரம் தூக்கம், 8 மணி நேரம் ஓய்வு, பின்னர் மீதம் இருக்கும் 8 மணி நேரம் வேலை என்கிற அடிப்படையில் 8 மணி நேர வேலைக்கான திட்டம் அமைக்கப்பட்டு மிகப்பெரிய போராட்டத்திற்கு பின்னர் அந்த திட்டம் வெற்றி பெற்றது.
1886 ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் தொழிலாளர்கள் வேலை நேர குறைப்புக்கான போராட்டத்தில் இறங்கினர். அப்போதெல்லாம் எத்தனை மணி நேரம் வேலை செய்கிறோம் என்பதே தெரியாமல் இருந்தார்கள் தொழிலாளர்கள்.
சில நிறுவனங்கள் பன்னிரண்டு மணி நேரம் வேலை வாங்கியது சில நிறுவனங்கள் 14 மணி நேரம் வேலை வாங்கியது இப்படிப்பட்ட நேரத்தில் தான் 8 மணி நேரமாக வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என்கிற போராட்டத்தில் இறங்கினர் தொழிலாளர்கள்.
1886 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிக்காகோ நகரில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று போராடினர்.
அமெரிக்காவில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது காவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் மட்டும் 4000 பேர் உயிரிழந்தனர்.1889 ஜூலை மாதம் 14ஆம் தேதி பாரிஸ் நகரில் சோசலிச தொழிலாளர்களின் சர்வதேச பாராளுமன்றம் கூடியது. அப்போது சிகாகோ நகர் போராட்டத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது கூட்டத்தில் தலைமை தாங்கியவர் ஏங்கல்ஸ்.
ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் வேலை நேரம் ஒரு நாளைக்கு 8 மணி நேரமாக குறைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து தொழிலாளர்கள் போராடத் தொடங்கினார்கள். கம்யூனிச, சோசியலிசை அமைப்புகள் இந்த போராட்டங்களை ஒருங்கிணைத்தன.
இந்தியாவில் முதன்முறையாக 1923 மே 1 அன்று பொதுவுடமை கட்சி தலைவராக இருந்த சிங்காரவேலர் மேநாள் கொண்டாட்டத்தை நடத்தினார். மெரினா கடற்கரையிலும், உயர்நீதிமன்ற வளாகத்திலும் அன்று இரண்டு கூட்டங்கள் நடத்தப்பட்டது. மே 1 தொழிலாளர் நாளாக அங்கீகரிக்கவும்,அந் நாளை அரசு விடுமுறை நாளாக அறிவிக்கவும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேலை என்கிற உழைப்பு சுரண்டலை மாற்றி அமைத்து இந்திய தொழிலாளர்களுக்கு சட்டபூர்வமாக எட்டு மணி நேர வேலை உரிமையை 1945 நவம்பர் 28 அன்று அம்பேத்கர் பெற்று தந்தார்.
ஜனநாயக நாடுகள் எட்டு மணி நேரம் வேலையை தொடர்ந்து செய்து வந்த நிலையில் திடீரென நிறுவனங்கள் தொழிலாளர்கள் ஒருமித்த கருத்தோடு ஏற்றுக் கொண்டால் 12 மணி நேர வேலை என்கிற ஒரு மசோதாவை தமிழக அரசு சட்டமன்றத்தில் கொண்டு வந்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று சொல்லலாம். சாதாரணமாக ஒருவர் 8 மணி நேரம் வேலை செய்தாலே மிகப்பெரிய அசதியை ஏற்படுத்தும். இந்த சூழ்நிலையில் இப்படி ஒரு சட்ட மசோதாவை கொண்டு வந்துள்ளது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. இது ஒரு மக்கள் விரோத போக்கு, அடிப்படை உரிமைகளை செயல் இழக்க செய்யும் செயல்,
அடிமைத்தனத்திற்கு மக்களை தயார்படுத்தும் ஒரு வித்தை, பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி உழைப்பு சுரண்டலை தொடங்கி வைக்கிற தொடக்கம். எனவே இந்த சட்ட மசோதாவை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். என்னதான் வெளிநாட்டு கம்பெனிகளில் புரிந்துணர் ஒப்பந்தத்தில் தொழிலாளர்களின் நசுக்கக்கூடிய பல சட்டங்கள் இருந்தாலும் கூட, இது போன்ற சட்டங்களை இயற்றி சொந்த நாட்டு மக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு இணையான இந்த செயலை ஒட்டுமொத்த தொழிலாளர்கள் அல்ல மக்களும் கண்டிக்க வேண்டிய நிலை இருக்கிறது.
தமிழக அரசு இப்படி ஒரு நிலையை ஏன் எடுத்தோம் என்று நினைத்திருப்பது எல்லோருக்கும் தெரிகிறது. அதற்கான விளக்கத்தையும் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். எனவே 12 மணி நேர வேலை என்கிற சட்ட மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவோ, செயல்படுத்தாமல் இருக்கவோ கூடாது. அதை திரும்ப பெற வேண்டும் என்பதுதான் மக்களுக்கு அரசு ஆற்றுகிற தொண்டாக இருக்கும்.
ஜோதி நரசிம்மன்
ஆசிரியர்