வெ. இரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட மாருதி (வயது 85) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓவியர் ஆவார். உளியின் ஓசை, பெண் சிங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணகயாற்றி உள்ளார்.
இரங்கநாதன் புதுக்கோட்டையில் 1938, ஆகஸ்ட் 28 அன்று டி.வெங்கோப ராவ், பத்மாவதி பாய் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர்கள் மராத்திய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வெங்கோப ராவ் ஆசிரியராகப் பணி செய்தார். அதனால் வீட்டில் கிடைக்கும் சாக்பீஸைக் கொண்டு இரங்கநாதன் ஓவியம் வரையக் கற்றுக்கொண்டார்.
இரங்கநாதன் புதுக்கோட்டையில் எஸ்.எஸ்.எல்.சி வரைப் படித்துள்ளார். புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பி.யூ.சி. படிப்பில் சேர்ந்தார். ஆனால் ஓவியங்களின் மீதான ஆர்வம் காரணமாக படிப்பினை பாதியில் நிறுத்திவிட்டார். தஞ்சாவூரைச் சேர்ந்த அரசு ஊழியரான விமலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு சுபாஷினி, சுஹாசினி என இரு மகள்கள் உள்ளனர்.
இவர் கே. மாதவன் என்ற ஓவியரை மானசீகக் குருவாக எண்ணிக் கற்றார். திரைப்படங்களுக்கு பேனர் வரையும் ஆசையில் 1959 மார்ச் 11-இல் சென்னைக்குச் சென்றார். மைலாப்பூரில் திரைப்படங்களுக்கு பேனர் வரையும் நிறுவனத்தில் ஓவியம் வரைதல் மற்றும் பெயர் எழுதும் பணி செய்தார். சென்னையில் ஆர்.நடராஜன் என்ற ஓவியரிடம் நடிகர் சிவக்குமாரும், இரங்கநாதனும் ஓவியம் கற்றார்கள்.
இரங்கநாதன் திரைப்படங்களுக்கு பேனர் உள்ளிட்டவற்றை வரையும் வேலை செய்து கொண்டிருந்தார். அக்காலத்தில் நாளிதழ்களில் ஓவியம் வரையும் வாய்ப்பு பெற்றார். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் வேலை செய்வதால் ஏற்படுகிற பிரச்சனையை தீர்க்க இதழ்களுக்கு ஓவியம் வரையும் பொழுது ‘மாருதி’ என கையொப்பம் இட்டார். அது அவர் தங்கியிருந்த இடத்திற்கு அருகே உள்ள மாருதி பார்மசியிலிருந்து எடுக்கப்பட்டதென நேர்காணலில் கூறியுள்ளார்.
மாருதி என்ற பெயரில் இவரது முதல் ஓவியம் 20 ஏப்ரல் 1969 அன்று குமுதம் வார இதழில் வெளியானது. அந்த இதழில் ‘அய்யோ பாவம்’ என்ற தலைப்பிலான சிறுகதைக்காக ஓவியம் வரைந்திருந்தார்.
இவருக்கு தமிழக முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர். ஓவியப் பணிகளையும், வீடும் தந்தார். அதேபோல மற்றொரு முன்னாள் முதல்வரான மு. கருணாநிதி, இராஜராஜன் ஆயிரமாவது ஆண்டு விழாவில் அவரது கடல்போர் உள்ளிட்ட சில படைப்புகளுக்கு ஓவியம் வரையும் வாய்ப்பு தந்துள்ளார்.
புனே நகரில் மகள் வீட்டில் தங்கியிருந்த மாருதி, உடல்நலக் குறைவு காரணமாக இன்று, ஜூலை 27 வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் காலமானார். இவருடைய மனைவி விமலா கொரோனா காலத்தில் மறைந்தார்.
‘ஃபோட்டோபினிஷிங்’கில் அமையும் இவருடைய ஓவியங்கள் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றவை என்பது குறிப்பிடத் தக்கது.