- பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயத்தை பாதிக்கும் எந்த தொழிற்சாலையும் கொண்டு வரக்கூடாது என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தி உள்ளார்.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை டெல்டா மாவட்டமாக அறிவிக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். டெல்டாவை பாலைவனமாக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கொண்டு வரக்கூடாது. ஓ.என்.ஜி.சி புதிய எண்ணெய் கிணறு தோண்ட கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த 2018 ஆம் ஆண்டு அம்மாபேட்டை பஸ் நிலையம் முன்பு தாளாண்மை உழவர் இயக்க தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ் தேசிய பேரியக்கம் தலைவர் மணியரசன் உள்ளிட்ட பலர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அம்மாபேட்டை போலீசார் திருநாவுக்கரசு, திருமாவளவன், வேல்முருகன், மணியரசன் உள்ளிட்ட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஒருங்கிணைந்த தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று தஞ்சாவூர் கோர்ட்டில் ஆஜரானார்.வழக்கு விசாரித்த நீதிபதி அடுத்த மாதம் 15-ந் தேதிக்கு தள்ளி வைத்தார். நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வெளியே வந்த வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னர் பெய்த கனமழையில் 5 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண தொகையை முதலமைச்சர் அறிவித்துள்ளார். கள்ளச்சாராய மரணத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டது. ஆனால் மின்கம்பம் சீரமைக்கும் பணியில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தவருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது.
மனித உயிர் விலை மதிக்க முடியாதது. நிவாரணம் என்பது ஒரே மாதிரியாக வகுக்க வேண்டும். குறைந்தது ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவித்து ஒரே மாதிரியாக வழங்க வேண்டும். இதில் பாகுபாடுக்கூடாது என்றார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் துரித நடவடிக்கை எடுக்க 15-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதேபோல் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். எனவே நியமிக்கப்பட்ட அனைவரும் துரிதமாக பணி செய்து இயற்கை பேரிடர்களில் இருந்து மக்களை காக்க வேண்டும்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/fisheries-department-warns-fishermen-not-to-go-to-sea-for-three-days-due-to-heavy-rains/
பருவ மழை, பேரிடர் கால நிவாரண நிதிகளை மத்திய அரசு ஒருபோதும் தமிழகத்திற்கு வழங்கியது இல்லை. ஜிஎஸ்டி வரி வசூலித்த தொகைகளை கூட வழங்கவில்லை. எனவே தமிழக அரசே உரிய நிதிகளை ஒதுக்கி வழங்க வேண்டும். என கேட்டுக் கொண்டார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயம், நீர்வளத்தை பாதிக்கும் எந்த தொழிற்சாலையும் கொண்டு வரக்கூடாது என வலியுறுத்தினார்.