சென்னை: ஒரு பைசா செலவில்லை. புற்றுநோய்க்கு அதிநவீன ரோபோடிக் அறுவை சிகிச்சை. இந்தியாவிலேயே இதிலும் தமிழ்நாடுதான் முன்னோடி. இதற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் காரணம். கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் உள்ள ஓமந்தூரார் தமிழ்நாடு அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 34 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புற்றுநோய்க்கான அதிநவீன இயந்திர மனிதவியல் அறுவைசிகிச்சை மையத்தை ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

அதாவது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், இந்தியாவிலேயே ஒரு மாநில அரசின் மருத்துவமனையொன்றில் இந்தச் சிகிச்சை தமிழ்நாட்டில்தான் முதன்முதலாகத் தொடங்கப்பட்டது. இந்தச் சேவையைத் தொடங்கி, கிட்டத்தட்ட ஒரு ஆண்டு நிறைவடைந்துவிட்டது. இதனால் இதுவரை செய்யப்பட்ட அறுவை சிகிச்சை மூலம் 65க்கும் அதிகமான புற்றுநோயாளிகள் பலனடைந்துள்ளனர் என்கிறார் டாக்டர் சுரேஷ்குமார். முதற்கட்ட சிகிச்சைக்கே 5 லட்சம் வரை செலவாகும் எனக் கூறும் அவர், இதனை அரசு ஒரு பைசா செலவு வாங்காமல் சேவை செய்து வருகிறது என்கிறார். எனவே இது குறித்து புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுரேஷ்குமாரிடம் சில விளக்கங்களைக் கேட்டுப் பெற்றோம். “புற்றுநோய்க் கான இந்த ரோபோடிக் அறுவைசிகிச்சை என்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டு அரசு மருத்துவமனையில் மட்டும்தான் செய்யப்படுகிறது.

வேறு எந்த மாநில அரசு மருத்துவமனைகளிலும் இந்த உயர் சிகிச்சை இலவசமாகச் செய்யப்படுவதில்லை. இந்தச் சிறப்புச் சிகிச்சை முறையைக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலமைச்சர் ஸ்டாலின், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு பன்நோக்கு மருத்துவமனையில் தொடங்கிவைத்தார். அவர் தொடங்கிவைத்தது முதல் இதுவரை எங்களது மருத்துவமனையில்
65க்கும் மேலான அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளோம்.

இந்த ரோபோடிக் அறுவை சிகிச்சை என்பதை ஒரு நோயாளி செய்து கொள்ள வேண்டும் என்றால், குறைந்த பட்சம் 5 லட்சம் செலவாகும். மீண்டும் சொல்கிறேன். இது குறைந்தபட்ச செலவுதான். நோயின் தன்மையை அதிகமாக இருக்கும்போது செலவு இன்னும் கூடுதலாகும். ஆனால், நமது தமிழ்நாடு அரசு நோயாளி ஒருவருக்கு ரோபோடிக் அறுவை சிகிச்சை தேவையா என்பதைக் கண்டறிந்துவிட்டால், அவர்கள் அனைவருக்கும் எந்தவித பாரபட்சமும் இன்றி முற்றிலும் இலவசமாகவே இந்தச் சிகிச்சைக்கான சேவையை அளித்து வருகிறது. ஒரு பைசாகூட செலவு இல்லாமல் பொதுமக்கள் இதன் மூலம் பயன்பெற முடியும்.

இதுவரைப் பல பேர் பயன்பெற்றும் உள்ளனர்” என்கிறார் சுரேஷ்குமார். அவரிடம் மேலும் சில கேள்விகளை முன் வைத்தோம். அந்த ரோபோடிக் சிகிச்சை என்றால் என்ன? “எல்லா அறுவை சிகிச்சை போன்றதுதான் இந்த ரோபோடிக் அறுவை சிகிச்சை என்பதும். ஒரு நோயாளிக்கு மயக்க மருந்து எல்லாம் கொடுத்த பிறகு ரோபோ மூலமாகச் செய்வோம். இந்த ரோபோ சிகிச்சை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படும். ஒன்று, பேஷன்ட் பார்ட் என்போம். இரண்டு, விஷன் பார்ட் என்போம். மூன்றாவது, கன்சோல். இதில் பேஷன்ட் பார்ட் எனச் சொல்லும் ரோபோ நோயாளியின் அருகாமையிலேயே இருக்கும். அதற்கு நான்கு கைகள் இருக்கும்.
அதை நோயாளியுடன் இணைத்துவிடுவோம். அடுத்தது விஷன் பார்ட் என்பது நோயாளியின் உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதைக் கண்காணிப்பதற்கான கேமிரா உடன் இயங்கும். அதை நாம் காட்சியாக வெளியே இருந்தே பார்க்க உதவும்.

இதில் கன்சோல் பார்ட் என்பதுதான் மிக முக்கியமானது. பலரும் நினைப்பதைப்போல ரோபோவே இந்த அறுவை சிகிச்சையைச் செய்யாது. அந்த அறுவை சிகிச்சை நிபுணர் என்ன செய்ய வேண்டும்
என்று கட்டளை இடுகிறாரோ அதைத்தான் அந்த ரோபோ செய்யும். இதனால் என்ன இலாபம் என்றால், ஒரு அறுவை சிகிச்சை நிபுணரானவர் நோயாளியின் அருகிலேயே இருந்து சிகிச்சை செய்யத் தேவையில்லை. அவர் கன்சோல் பார்ட் அறையிலிருந்தபடி தன் கட்டளைகளை ரோபோவுக்கு அனுப்புவார். அது மிகத் துல்லியமாக அதைச் செய்து முடிக்கும்.” என்ன என்ன வகையான புற்றுநோய்களுக்கு இந்த ரோபோடிக் மூலம் சிகிச்சை அளிக்க முடியும்? “இந்த ரோபோடிக் மூலம் 90% சதவீதமான புற்று நோய்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியும். ஏன் மருத்துவரே நேரடியாக அறுவை சிகிச்சை செய்யாமல், ரோபோவை விட்டுச் செய்கிறோம் என்றால், மனிதன் மூலம் செய்யப்படும் அறுவை சிகிச்சையைவிட, ரோபோ என்பது மிகக் கச்சிதமாக அதைச் செய்யும்.

என்ன திட்டமிடுகிறதோ அதில் ஒரு 1% கூட அது விலகாது. ஒரு துளையை நோயாளியின் உடம்பில் இடவேண்டும் என அது குறித்தால், அந்தத் துளையானது அளவிட்ட இடத்தைவிட்டு,
ஒரு இம்மியும்கூட விலகாது. இவை எல்லாம் அறுவை சிகிச்சையை மிகத் துல்லியமாக்கும். நோயாளி தேவையில்லாமல் மற்றும் சிரமங்களை மேற்கொள்ள வேண்டி இருக்காது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், மனித உடலில் பல பாகங்கள் உள்ளன. எல்லா பாகங்களிலும் அறுவை சிகிச்சை நிபுணரால் கைகளை நுழைய விட்டு, அறுவை செய்ய முடியாது. அதைப் போன்ற இடர்பாடுகள் நிறைந்த பாகங்களை இந்த ரோபோ மிக எளிமையாகக் கையாளும். அதனால்தான் நாம் ரோபோவின் உதவியை நாடுகிறோம். இதனால் நோயாளிக்குத் தேவையில்லாத சேதாரங்கள் இருக்காது. அவர் அதிக வலியைத் தாங்க வேண்டிய தேவை இருக்காது. மிகச் சுகாதாரமாக அவர் தனது அறுவை சிகிச்சையைச் செய்து கொள்ள முடியும்.” மனித உயிர்களை மதிப்பதிலும் இந்தியாவில் தமிழ்நாடுதான் முன்னோடி மாநிலம்!