- குத்தகை ரத்து விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கும், சென்னை ரேஸ் கிளப்-புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வாடகை பாக்கி 730 கோடி ரூபாயை செலுத்தவில்லை என்பதால், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சென்னை ரேஸ் கிளப்-புக்கு சீல் வைக்கப்பட்டது. தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராக ரேஸ் கிளப் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியது.
அப்போது, குத்தகை ரத்து குறித்து கிளப் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பி, பின் நிலத்தை சுவாதீனம் எடுப்பது குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசுத்தரப்பில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்துக்கு மாறாக, குத்தகை ரத்து செய்யப்பட்டதாக கூறி, ரேஸ் கிளப் நிர்வாகம் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரசுத்தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்தரன் ஆஜராகி, நிலம் குத்தகை ரத்து விவகாரத்தில் தமிழக அரசுக்கும், ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்து வருவதால், இந்த அவமதிப்பு வழக்கின் விசாரணையை நான்கு வாரங்கள் தள்ளிவைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ரேஸ் கிளப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
