கீழ் பவானி கால்வாய் பாசனத்திற்குத் தேவையான நீரை தமிழ்ந …

Sathya Bala
1 Min Read
சீமான்

கீழ் பவானி கால்வாய் பாசனத்திற்குத் தேவையான நீரை உடனடியாக தமிழ்நாடு அரசு திறந்துவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “கரூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கீழ் பவானி பாசனப்பகுதிகளுக்கு உரிய ஐந்தாம் நனைப்புக்குரிய நீர் திறக்காத காரணத்தினால் பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளதால் வேளாண் பெருங்குடி மக்கள் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்துள்ளனர். வேளாண்மைக்கு உரிய நீரினைத் திறக்காமல் தமிழ்நாடு அரசு அலட்சியம் செய்துவருவது வன்மையான கண்டனத்திற்குரியது.

கீழ்பவானி பாசனத்திற்கு ஆண்டுக்கு 6 முறை தண்ணீர் திறந்துவிடுவது வழக்கமான நடைமுறையாக உள்ள நிலையில் இந்த ஆண்டு அது 5 முறையாக குறைக்கப்பட்டுள்ளது.. இதனால் பயிரிடப்பட்ட எள், நிலக்கடலை, சோளம், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் கருகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையும், அச்சமும் அடைந்துள்ளனர். பவானிசாகர் அணையிலிருந்து வழங்கப்படும் நீரினை முறைப்படுத்தினாலே வேளாண் பாசனத்திற்குத் தேவையான நீரினைத் தடையின்றி வழங்கிட முடியும்.

சீமான்

இது குறித்து வேளாண் பெருங்குடி மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், தமிழ்நாடு அமைச்சரிடம் இருமுறை நடத்திய பேச்சுவார்த்தையும் எவ்விதத் தீர்வும் எட்டப்படாமல் தோல்வியடைந்துள்ளது. உரிய காலத்தில், உரிய அளவில் நீரினைத் திறக்காமல் நீர்வளத்துறை அதிகாரிகளும், தமிழ்நாடு அரசும் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவது கொடுங்கோன்மையாகும்.

ஆகவே, விவசாயிகள் அரும்பாடுபட்டு விதைத்து விளைவித்த பயிர்கள் கருகி பெரும் நட்டத்திற்கு ஆளாவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு உடனடியாக கீழ்பவானி பாசனத்திற்கு உரிய பாசன நீரினைத் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

Share This Article
Leave a review