கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள், தற்போது முழுமையாக செயல்படுவதாக தமிழக கல்லூரி கல்வி இயக்குனர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

2 Min Read
சென்னை உயர் நீதிமன்றம்
  • கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள், தற்போது முழுமையாக செயல்படுவதாக தமிழக கல்லூரி கல்வி இயக்குனர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

    அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு சானட்டரி நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் காட்சி பொருட்களாக வைக்கப்பட்டு உள்ளதாக தினத்தந்தி நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

சென்னை உயர் நீதிமன்றம்

நாப்கின் இயந்திரங்கள் வைப்பது, பராமரிப்பது தொடர்பாக கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி உயர் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படவில்லை எனக் கூறி, இதுசம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு உத்தரவிட்டிருந்தது.

- Advertisement -
Ad imageAd image

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கல்லூரி கல்வி இயக்கக இயக்குனர் தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் நீலகண்டன் தாக்கல் செய்த அறிக்கையில், 2017-18ம் ஆண்டு நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, 89 கல்லூரிகளில் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அவை பழுதடைந்தால் சரி செய்து முழுமையாக செயல்படச் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

மேலும், தினத்தந்தி செய்தியின் அடிப்படையில், ராணி மேரி கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள், தற்போது முழுமையாக செயல்படுவதாகவும், இதுசம்பந்தமாக இரு கல்லூரிகளின் முதல்வர்களும் புகைப்படத்துடன் அறிக்கை அளித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர அனைத்து அரசு கல்லூரிகளிலும் மாணவிகளுக்காக, தலா 5 லட்சம் செலவில் தனி ஓய்வறைகள் கட்ட 8 கோடியே 55 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அரசு கல்லூரிகளில் சுகாதாரமான சூழலை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படியும், பள்ளிகளின் நிலவரம் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய பள்ளி கல்வித் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 26ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Share This Article
Leave a review