தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக 8வது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் திரு ரவி, மத்திய மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் திரு அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் பட்டங்களை வழங்கினார்.
தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய மத்திய இணை அமைச்சர், பட்டம் பெற்றுள்ள மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, மீன்வளத் துறையானது வேலைவாய்ப்பு, உணவு பாதுகாப்பு, அன்னிய செலாவணி, வருமானம் என பல்வேறு துறைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என தெரிவித்தார்.
இந்தியாவில் 2.8 கோடி பேர் மீன்வளம் மற்றும் மீன்வளம் சார்ந்த துறையில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். உலகின் கடற்சார் உணவு பொருட்கள் தேவையில், 8% இந்தியா பூர்த்தி செய்கிறது என்றார்.
இறால் உற்பத்தியில் நாம் முதலிடத்தில் இருக்கிறோம். நமக்கு போட்டியாக உள்ள ஈக்வாடர் நாட்டை விட நாம் அதிகமாக உற்பத்தி செய்து முன்னேறி உள்ளோம் என்று தெரிவித்தார்.
மாணவர்கள் சர்வதேச அளவில் போட்டியிட்டு முன்னேற வேண்டும் என்பதற்காக தேசிய கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியா தரமான மனித வளத்தை கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

மீனவளத் துறைக்கென தனி அமைச்சகம் இந்த அரசு தான் கொண்டு வந்துள்ளது. 2014 இல் இருந்து இந்த துறையின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இந்தத் துறையில் கிட்டத்தட்ட 38 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம். நீலப் புரட்சியின் கீழ் 5000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
1950 முதல் 2014 வரை 55.79 லட்சம் டன் மட்டுமே மீன் உற்பத்தி இருந்தது. ஆனால் 2014 முதல் 2022 வரை 161.48 லட்சம் டன் மீன் உற்பத்தி நடைபெற்றுள்ளது.
இந்திய மீன் ஏற்றுமதியானது 64 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நடந்து வருகிறது. இதை 2025 ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த நாம் உழைத்து வருகிறோம் என தெரிவித்தார்.
மீனவர்களுக்கும் விவசாயிகள் கடன் அட்டை வழங்கப்பட்டு வருகிறது என்றும், மீன்வளத்துறையில் எதிர்காலத்திற்கு தேவையான தொழில்நுட்பங்களை கண்டறியுமாறு மாணவர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
கடந்த 9 ஆண்டுகளில் ஒரு லட்சம் புத்தொழில்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 400க்கும் மேற்பட்டவை மீன்வளத் துறையை சார்ந்தவை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மீன் வளம் மற்றும் மீன்பிடி துறை குறித்த தகவல்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சாகர் மித்ரா என்ற பணியிடத்தை ஏற்படுத்தி உள்ளோம் என கூறினார். கடலோர கிராமங்களின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக 7 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளோம். இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் கடற்பாசி பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது.
புரோட்டின் அதிகமாக இருப்பதால் மதிய உணவுத் திட்டத்தில் கடற்பாசியை சேர்ப்பது குறித்து ஆலோசித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.