மருத்துவப்படிப்பு லட்சியத்தை கெடுக்கும் நீட், கனவு நிறைவேறுமா என்ற கோரிக்கையை எழுப்பி உள்ளார் மாணவி கனிஷ்கா.!

0
53
  • நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அரசுப்பள்ளியில் படித்த கிராமப்புற மாணவியான எனது மருத்துவப்படிப்பு லட்சியம் நிறைவேற தமிழக அரசு உதவி செய்யுமா? எனது கனவு நிறைவேறுமா என்ற கோரிக்கையை எழுப்பி உள்ளார் மாணவி கனிஷ்கா.

மருத்துவப்படிப்பு லட்சியத்தை கெடுக்கும் நீட்மருத்துவப்படிப்பு என்பது மாணவ, மாணவிகளுக்கு கனவு, லட்சியம், குறிக்கோள் என்றே கூறலாம். டாக்டராகி பெற்றோருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதுதான் மாணவ, மாணவிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் நீட் என்ற அரக்கனின் கரங்களில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது கிராமப்புற மாணவ, மாணவிகளின் மருத்துவப்படிப்பு லட்சியம். ஆனால் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் மருத்துவப்படிப்புக்கு உலை வைப்பது போல் வந்து சேர்ந்துள்ளது நீட் தேர்வு.

நீட் தேர்வுக்கு முன்பும், நீட் தேர்வுக்கு பின்பும் நீட் தேர்வுக்கு முன்பு 2013-14ம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3267 மாணவர்கள் சேர்ந்தனர். இவர்களில் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள் 3251 பேர். சிபிஎஸ்இ மாணவர்கள் 4 பேர். பிறர் 12 பேர், அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதே நிலை நீடிக்க, 2014-15 கல்வி ஆண்டைப் பொருத்தவரையில் மருத்துவப்படிப்பில் சேர்ந்த மாணவர்கள் 3147 பேர் இவர்களில் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள் 3,140பேர், சிபிஎஸ்இ மாணவர்கள் 2 பேர், பிறர் 5பேர்.

இதேபோல் 2016-17ம் கல்வி ஆண்டில் இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்தது. ஆனால் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பின்னர் 2017-18ஆம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க சேர்ந்தோர்களில் சிபிஎஸ்இ மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. 2017-18ஆம் ஆண்டில் ஆயிரத்து 113ஆக அதிகரித்தது. அதே நேரத்தில் முன்னர் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த 3000 அதிகமானோர் மருத்துவப்படிப்பில் சேர்ந்து வந்த நிலையில், அவர்களின் எண்ணிக்கையானது 2,303ஆகக் குறைந்தது.

2020-21ஆம் ஆண்டில் அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடங்களை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் 336 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க இடங்களை ஒதுக்கினர். மீதமுள்ள 92.5 விழுக்காடு இடங்களில் மொத்தம் 4,129 மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர்ந்தனர்.

முன் எப்போதும் இல்லாத அளவில் சிபிஎஸ்இ மாணவர்களின் எண்ணிக்கை 1,604ஆக உயர்ந்தது. அதே போல் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்களின் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத வகையில் 2,453 ஆக குறைந்தது. இப்படி நீட் என்ற தேர்வு அரக்கன் போல் கிராமப்புற அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் மருத்துவப்படிப்பில் சாதிக்க நினைத்தவர்களின் கழுத்தில் விழுந்த தூக்கு கயிறு போல் மாறிவிட்டது.

பிள்ளையார்பட்டி மாணவியின் தீராத மருத்துவப்படிப்பு தாகம் தமிழகத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்து மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நடந்து வருகிறது. இதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சி எல்லம்மாள் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கவிதா. மணிகண்டன் கூலித் தொழிலாளி. நடுத்தர குடும்பத்தினரான இவர்களின் 2வது மகள் கனிஷ்கா (18). தஞ்சையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 12ம் வகுப்பு வரை படித்தவருக்கு சிறுவயதில் இருந்தே மருத்துவப்படிப்பு என்பது லட்சியக்கனவாக இருந்தது. இதனால் 2022ம் ஆண்டு மேல்நிலைப்படிப்பை முடித்தவுடன் சென்னையில் உள்ள ஆற்றுப்படை அறக்கட்டளையில் நீட் தேர்விற்காக இலவச பயிற்சி மேற்கொண்டார்.2023ம் ஆண்டு முதல்முறையாக நீட் தேர்வு எழுதிய போது 513 மதிப்பெண் எடுத்தார். அப்போது 2வது சுற்று கலந்தாய்வுக்கு கட் ஆப் மார்க் 556. தனியார் மருத்துவக்கல்லூரியில்தான் இட ஒதுக்கீடு கிடைத்தது.

2 ஆண்டுகள் தொடர்ந்து நீட் தேர்வு எழுதினார் ,வசதி வாய்ப்பு இல்லாததால் நடப்பாண்டு மீண்டும் இரண்டாவது முறையாக நீட் தேர்வை எழுதினார் கனிஷ்கா. இப்போது இவர் எடுத்த மதிப்பெண் 613. இங்குதான் விதி விளையாடியது… இந்தாண்டு கட் ஆப் மார்க் 620 ஆக உயர்த்தப்பட்டது. இதனால் இம்முறையும் இவரால் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர முடியாத நிலை. தந்தையிடம் பொருளாதார வசதி இல்லாததால் மிகுந்த மன உளைச்சலுடன் உள்ளார் கனிஷ்கா. தனக்கு அரசு உதவினால் நிச்சயமாக தனது லட்சியம் நிறைவேறும் என்றார்.

கண்ணீருடன் அரசு உதவியை எதிர்பார்த்துள்ள கனிஷ்கா ,மாணவி கனிஷ்கா கூறியதாவது: எனக்கு சிறுவயதில் இருந்தே மருத்துவப்படிப்பு என்பது தீராத லட்சியமாக இருந்து வருகிறது. இதற்காக கடினமாக படித்தேன். நடுத்தர குடும்பம். பொருளாதாரம் அதிகமில்லை. அதனால் சென்னையில் ஆற்றுப்படை அறக்கட்டளை வாயிலாக நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி எடுத்து படித்தேன். அதில் முதல்முறையாக கடந்த ஆண்டு 513 மதிப்பெண், இந்தாண்டு 613 மதிப்பெண் எடுத்து 2ம் சுற்று கட் ஆப் மதிப்பெண் அதிகரிக்கப்பட்டதால் மருத்துவப்படிப்பு படிக்க முடியாத நிலை உள்ளது. தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 5 ஆண்டுக்கு ரூ.40 லட்சம் கட்டணம் வந்துவிடும். இதே அரசு மருத்துவக்கல்லூரி என்றால் 5 ஆண்டுக்கு 80 ஆயிரம் ரூபாய்க்குள் கட்டணம். இந்தாண்டு கட் ஆப் மார்க் உயர்த்தப்பட்டதால் தனியார் கல்லூரியில்தான் இடம் ஒதுக்கீடு கிடைத்துள்ளது. என்னுடன் படித்தவர்கள் தற்போது இளநிலை பட்டப்படிப்பு 2ம் ஆண்டு படிக்கின்றனர்.

எனக்கு 2 ஆண்டுகள் நீட் தேர்வுக்காக போய்விட்டது. இந்தாண்டு மருத்துவப்படிப்பு நிச்சயம் படிக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு உதவிக்கரம் நீட்டுமா? எனது மருத்துவப்படிப்பு லட்சியம் நிறைவேறுமா? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இம்மாணவியின் கோரிக்கை அரசின் காதுகளை எட்டுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here