- வீட்டின் முன்பு போலீசாரை நிறுத்துவதும் சட்டவிரோத காவல்தான் என வாராகி மனைவி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சார் பதிவாளரை பணம் கேட்டு மிரட்டியதாக பத்திரிகையாளர் வராகியை மயிலாப்பூர் போலீசார் கடந்த 13-ந்தேதி கைது செய்தனர். பின்னர், அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை சிறையில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில், வராகியின் மனைவி நீலிமாவையும், குழந்தைகளையும் போலீசார் சட்டவிரோதமாக வீட்டில் அடைத்து வைத்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் வராகியின் சகோதரி கோகிலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் குறித்து யூடியூப் சேனல்களில் பல செய்திகளை வெளியிட்டதால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். தற்போது வீட்டுக்கு வெளியில் 24 மணி நேரமும் 2 போலீசார் நிற்கின்றனர். அவர்களிடம் சொல்லி அனுமதி பெற்றுத்தான் அத்தியாவசிய பொருட்களை வாங்கக்கூட வெளியில் செல்ல முடிகிறது. அவர்களை தனிமை சிறையில் அடைத்து வைப்பதுபோல வைத்துள்ளனர்’’ என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளிடா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வராகி தரப்பில் வழக்கறிஞர் கண்ணன் ஆஜராகி வாதிட்டார். அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வக்கீல் ராஜ்திலக் ஆஜராகி, ‘‘தற்போது வராகி வீட்டின் முன்பு போலீசார் யாரும் இல்லை’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘வீட்டின் முன்பு போலீசாரை நிறுத்தினால், அதுவும் ஒருவகையில் சட்டவிரோத காவல்தான்’’ என்று கருத்து தெரிவித்தனர்.
பின்னர், ஆட்கொணர்வு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
