அமைச்சர் செந்தில்பாலாஜி கைது விவகாரத்தில் திமுக துணை நிற்பது ஏன்?. செந்தில்பாலாஜி மூலம் அனைவரும் பயனடைந்திருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. மேலும் எவ்வளவோ மக்கள் பணிகள் தொடர்பான நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, கைதியை மருத்துவமனைக்கு நேரில் சென்று முதல்வர் பார்ப்பது எந்த வகையில் நியாயம்?” என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டாஸ்மாக் கடைகள் மூலம் எத்தனையோ லட்சம் குடும்பங்கள் அழிந்ததன் விளைவாகதான் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். 2016ம் ஆண்டு அப்போதைய தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் அலுவலகத்தில் சோதனை நடந்தபோது, அதிகாரிகள் தங்களது கடமையை செய்கிறார்கள் என அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
தற்போது தலைமை செயலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்வததற்கு ஸ்டாலின் உள்பட திமுகவினர் கண்டனம் தெரிவிப்பது எந்த வகையில் நியாயம்?. தலைமை செயலகத்துக்குள் புகுந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்யும் அளவுக்கு திராணி இல்லாத முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். தலைமைச் செயலகத்தில் நடந்த சோதனை ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஏற்பட்ட தலைகுனிவு. இந்த ஆட்சியாளர்களின் கையாலாகாத தனத்தைதான் காட்டுகிறது. செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பது லஞ்சம் ஊழலின் உச்சத்தை நிரூபிக்கும் நிகழ்வாகத்தான் மக்கள் இதனை பார்க்கிறார்கள்.
மேலும், செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்ய முற்பட்டபோது அழுது அலறி துடிப்பது போல் நாடகம் ஆடியுள்ளார். கைது செய்யும்போது செந்தில்பாலாஜி அருகில் இருப்பவர்களை காலால் எட்டி உதைக்கும் காட்சிகளும், தனது ஆடையை சரி செய்து கொள்வதும் தெளிவாக தெரிகிறது.என குறிப்பிட்டுள்ளார்.