துர்நாற்றம் வீசிய சிக்கன் துண்டை வாடிக்கையாளருக்கு பரிமாறிய உணவகம்..
அண்டைய மாநிலமான பெங்களூருவுக்கு இணையாக வளர்ந்து வரும் ஓசூர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசால் மாநகராட்சி அந்தஸ்து பெற்றது .
ஓசூர் நகரில் சிறிய உதிரிப் பாகங்கள் முதல் பெரிய தொழிற்சாலைகளுக்குப் பயன்படும் முக்கிய பாகங்கள் வரை தயாரிக்கப்பட்டு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது . இதில் பல பிரபலமான வெளிநாட்டு இருசக்கர வாகனங்கள் , கைக்கடிகாரம் மற்றும் நான்குசக்கர வாகன நிறுவனங்களின் உதிரிபாகங்களும் அடங்கும் .
இதனால் வேலைவாய்ப்பு தேடி இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இங்குத் தங்கி வேலைபார்த்து வருகின்றனர் .தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் உணவகங்கள் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது .

எனினும் சமீபகாலமாகத் தொழில் நகரமான ஓசூரில் தரமற்ற உணவகங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு அதிகரித்து வருகிறது . என்னதான் புகார் அளித்தாலும் உணவுத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் ஓசூர் மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் ஓசூர் ரிங் சாலை பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் உணவகத்தில் ஓசூரைச் சேர்ந்த நாகேந்திரா என்பவரும் அவரது நண்பரும் தந்தூரி சிக்கன் சாப்பிடச் சென்றுள்ளனர். அப்போது உணவகத்தில் அவர்களுக்குப் பரிமாறப்பட்ட தந்தூரி சிக்கன் துண்டை சாப்பிட்டபோது அதில் கடும் துர்நாற்றம் வீசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் உணவக உரிமையாளரிடம் சிக்கன் துண்டு கெட்டுப்போய் துர்நாற்றம் வீசுவதாக புகார் தெரிவித்துள்ளனர் . அதற்கு அந்த கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மற்ற தந்தூரி சிக்கன் துண்டுகள் நன்றாக இருக்கிறது, அதனைச் சாப்பிடுங்கள் என்று கூறியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அந்த சிக்கன் துண்டை இருவரும் ஓசூர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியிடம் கொடுத்து புகார் அளித்தனர்.
உணவுத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்த பின்னர் , பத்திரிகையாளர்களிடம் பேசிய நாகேந்திரா , வளர்ந்துவரும் தொழில் நகரமான ஓசூரில் , பல தரமற்ற உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன , இதனைக் கண்டறிந்து உணவுத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார் .
இது குறித்து ஓசூர் உணவுத்துறை அதிகாரியிடம் விசாரித்தபோது சம்பந்தப்பட்ட ஓட்டல் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது மேலும் புகார்தாரர் எங்களிடம் ஒப்படைத்த சிக்கன் துண்டை சென்னை கிண்டியில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம் ஆய்வு முடிவுகள் வந்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார் .