திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலை அரசியல் காரணங்களுக்காக மூடக்கூடாது என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ், “திருச்சியில் எஸ்.ஆர்.எம் நிறுவனத்தால் குத்தகை அடிப்படையில் நடத்தப்பட்டு வரும் எஸ்.ஆர்.எம் ஹோட்டலை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். திருச்சியில் தமிழ்நாடு அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான உணவு விடுதியை எஸ்.ஆர்.எம் நிறுவனம் குத்தகைக்கு எடுத்து எஸ்.ஆர்.எம் ஹோட்டல் என்ற பெயரில் நடத்தி வருகிறது.
தமிழக அரசின் குத்தகை நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக இந்த விடுதி நடத்தப்பட்டு வருகிறது. எஸ்.ஆர்.எம் ஹோட்டலை மூடக் கூடாது என்று உயர்நீதிமன்றம் தடை விதித்தும் குத்தகைக் காலம் முடிவடைவதற்கு முன்பாகவே அதை தமிழக அரசு மூட நினைப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.
அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் அமைச்சர் கே.என்.நேருவின் புதல்வரை எதிர்த்து எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் போட்டியிட்டது தான் அரசின் முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதை அரசியல் பழிவாங்கும் செயலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.

இத்தகைய பழிவாங்கும் செயல்கள் கூடாது. ஒரு புறம் சுற்றுலா வளர்ச்சி, தொழில் வளர்ச்சி என்று பேசிக் கொண்டு, இன்னொரு புறம் சுற்றுலா வளர்ச்சிக்காக செயல்படும் எஸ்.ஆர்.எம். ஹோட்டலை மூட நினைப்பது சரியான செயலல்ல. அரசியலை அரசியலாகப் பார்க்க வேண்டும்; வணிகத்தை வணிகமாக பார்க்க வேண்டும்.
எஸ்.ஆர்.எம் ஹோட்டலை மூடவோ, இடிக்கவோ அரசு முயற்சி செய்யக் கூடாது. குத்தகை விதிகளுக்கு உட்பட்ட எஸ்.ஆர்.எம் ஹோட்டலை தொடர்ந்து நடத்த எஸ்.ஆர்.எம் நிறுவனத்தை அரசு அனுமதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.