மரக்காணம் விஷ சாராயம் அருந்திய சம்பவத்தில், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்கள் எக்கியார்குப்பத்தைச் சேர்ந்த ராஜவேலு 38 , விஜயன் 55, மற்றும் சரத்குமார் 55 என்பது தெரியவந்துள்ளது .
மரக்காணம் எக்கியார்குப்பம் சம்பவத்தில் , விழுப்புரம் மருத்துவமனையில் 37 பேரும், புதுச்சேரியில் உள்ள (ஜிப்மர்) மருத்துவமனையில் 3 பேரும், புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 41 சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

பாதிக்கப்பட்டவர்கள், பெரும்பாலும் எக்கியார்குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் விவசாய கூலிகள் என்பதும் , இதே பகுதியை சேர்ந்த அமரன் 25 என்பவரிடம் இருந்து விஷ சாராயம் வாங்கியிருந்தனர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது .
இந்த சோக சம்பவத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை மட்டும் 55 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கள்ளச்சாராயம் குடித்து மேலும் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மதுராந்தகத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. பெரும்காரணை கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் 65 என்பவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில், கள்ள சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த புத்தூரைச் சேர்ந்த ராஜு, 32, மற்றும் பெரும்காரணையைச் சேர்ந்த சங்கர், 48 ஆகியோர் மருத்துவமனையில் இருந்து தப்பியுள்ளனர் . இவர்களை தேடும் பணியில் செங்கல்பட்டு மாவட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர் .

கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பான விசாரணையை குற்றப் பிரிவுப் புலனாய்வுத் துறைக்கு மாற்றுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இவ்விரு சம்பவங்களிலும் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் இறப்பு தொகையும் , விழுப்புரம், புதுச்சேரி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூபாய் 50,000ம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்த விஷ சாராய இறப்பு சம்பவ பின்னணியில் இருக்கும் அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலினை நம்பிக்கை தெரிவித்துள்ளார் .
முன்னதாக, விழுப்புரத்தில் நடைபெற்ற காவல்துறை உயர் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தில் தலைமை வகித்த முதல்வர் மு க ஸ்டாலின் , அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து, கள்ளச்சாராயம் உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதில் சமரசத்துக்கு இடமில்லை என்று தெரிவித்தார் .