விழுப்புரம் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 13வது தொகுதி ஆகும். இது 2008 ஆம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு பின்னர், புதிதாக உருவாக்கப்பட்ட மக்களவை தொகுதியாகும். இத்தொகுதியானது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.

தொகுதி மறுசீரமைப்பின்போது திண்டிவனம் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டது. அதற்குப் பதில் அதில் இருந்த பல தொகுதிகளை எடுத்தும், சில தொகுதிகளை சேர்த்தும் விழுப்புரம் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:
திண்டிவனம் (தனி)
வானூர் (தனி)
விழுப்புரம்
விக்கிரவாண்டி
திருக்கோயிலூர்
உளுந்தூர்பேட்டை.

கடந்த முறை நடைபெற்ற தேர்தலில், 7 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 6 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ரவிக்குமார், பாமக வேட்பாளரான, வடிவேல் இராவணனை 1,28,068 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளராக ரவிக்குமார் இருந்த போதிலும் அவர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட்டு வென்றார்.

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுகவே நேரடியாக போட்டியிடும் பட்சத்தில் மாவட்ட துணை செயலாளர் பதவி வகிக்கும் இளந்திரையன், மாநில ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான புஷ்பராஜ் இருவரும் போட்டியில் உள்ளனர்.

தமிழகத்தின் மிக முக்கியமான நாடாளுமன்ற தொகுதிகளில் விழுப்புரம் ஒன்று. வட-தென் மாவட்டங்களை இணைக்கக் கடிய முக்கிய பகுதியாக இது இருந்த வருகிறது. கடந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றாலும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மீண்டும் விழுப்புரம் தொகுதியை கேட்டு பெறுவதில் மும்பரமாக உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம் தொகுதி ஒதுக்கப்பட்டால் ரவிக்குமார் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

கடந்த முறை உதயசூரியின் சின்னத்தில் போட்டியிட்ட அவர் இந்த முறை பானை சின்னத்தில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் திமுக இந்த தொகுதியை தங்களுக்கு பெறுவதில் மிக மும்பரமாக இருந்து வருகிறது அப்படி இந்த தொகுதியை பெரும் நிலையில் திமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் மற்றும் மாவட்ட துணை செயலாளர் பதவி வகிக்கும் தயா.இளந்திரையன் உள்ளிட்டோர் போட்டியிட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.இருந்தாலும் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜிக்கே அதிகம் வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.

அதிமுக கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் இணைய உள்ள நிலையில் பாமகவை கூட்டணியில் இணைப்பதற்கு பெரும் முயற்சி எடுத்து வருகிறது அதிமுக. அப்படி பாமக இணையும் நிலையில் இதற்கு முன்னர் போட்டியிட்டு தோல்வி அடைந்த பாமகவின் பொது செயலாளர் வடிவேல் இராவணன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புரட்சி பாரதம் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சிலம்பரசன் போட்டியிடுவார் என பேசப்பட்டு வருகிறது. சிலம்பரசன் இந்தியன் வங்கியில் முதுநிலை மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அதிமுக சார்பில் புரட்சி பாரதம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்குவதாக பேசப்பட்டு வரும் சூழலில் விழுப்புரத்தை குறி வைக்கிறது புரட்சி பாரதம் கட்சி. அதனால்தான் விழுப்புரத்தில் ஒரு மிக பிரம்மாண்டமான மாநாட்டையும் நடத்தி காட்டியுள்ளனர்.
மேலும் அதிமுக நேரடியாக களம் இறங்கும் நிலையில் திமுகவில் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த விழுப்புரத்தை சேர்ந்த டாக்டர் முத்தையன் அந்த கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக சார்பில் இதுவரை யாரும் பேசப்படாத நிலையில் இருந்து வருகிறது நாம் தமிழர் கட்சி பேச்சிமுத்து என்கிற வேட்பாளரை அறிமுகம் செய்துள்ளது.
இந்த சூழ்நிலையில் மிக விரைவில் கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி முடித்து வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட உள்ளது வெற்றிக்கனி யாருக்கு பொறுத்திருந்து பார்ப்போம்