சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கன மழை பெய்து 4 மாவட்டங்கள் மழை நீரில் தற்போது வரை மிதந்து வருகிறது.இந்த நிலையில் பள்ளிக்கரணை பகுதியில் தந்தையை தேடிச் சென்ற மகன் மழை நீரில் மூழ்கி உயிரிழந்து, 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் டிசம்பர் கடந்த டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் பெய்த அதி கன மழையால் பெரும்பாலான இடங்கள் நீரில் மூழ்கின. சென்னையின் போரூர், காரப்பாக்கம், மணப்பாக்கம், முகலிவாக்கம், வேளச்சேரி, மேடவாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, முடிச்சூர், மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இடுப்பளவு முதல் 15 அடி வரை வெள்ள நீர் சூழ்ந்தது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து, லட்சக்கணக்கானோர், வெள்ள நீரில் சிக்கித் தவித்தனர்.

மழை ஓய்ந்து, 3 நாட்கள் ஆகியுள்ள நிலையிலும், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் இன்னும் வடியாமல் உள்ளது. மக்கள், அத்தியாவசிய பொருட்கள் இன்றி, வீட்டுக்குள் சிக்கி இருக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பல இடங்களில் 4 நாட்களாக மின்சாரம் இல்லை. குடிநீர் இல்லை. மொபைல் போன்களில் சார்ஜ் இல்லை, சார்ஜ் இருந்தாலும் நெட்வொர்க் இல்லை. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு பக்கம் அரசின் மீட்புப் பணிகள் நடக்க இன்னொரு பக்கம் தன்னார்வலர்களும் மீட்புப் பணிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை பள்ளிகரணையில் தந்தையை தேடிச் சென்ற மகன் மழைநீரில் மூழ்கி 3 நாட்கள் கழித்து உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பள்ளிக்கரணை காமகோடி நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் – ரேவதி தம்பதியின் மகன் அருண் (28). மகள் அம்பிகா. கனமழை காரணமாக இவர்கள் வசித்த பகுதி வெள்ளத்தில் தத்தளித்தது. வீடுகளில் மழைநீர் புகுந்துவிட்டதால், அங்கிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி தஞ்சம் அடைந்தனர். முருகனின் குடும்பமும் வீட்டைக் காலி செய்துவிட்டு, பாதுகாப்பான இடத்தைத் தேடிச் சென்றுள்ளனர். பாதுகாப்பு முகாமில் இருந்தபோது முருகன், வீட்டுக்குச் சென்று பார்த்து வருவதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

வீட்டுக்குச் செல்வதாகக் கூறிச் சென்றவர் நீண்ட நேரமாக முகாமுக்குத் திரும்பாததால், மகன் அருண் தந்தையைத் தேடி வீட்டுக்குச் சென்றுள்ளார். அருணும் மீண்டும் முகாமுக்கு வரவில்லை. இதையடுத்து, அவர்களது குடும்பத்தினர், தந்தையையும், மகனையும் காணாமல் துயரில் தவித்துள்ளனர். இரண்டு நாள்களுக்குப் பிறகு, மழைநீர் சற்று வடிந்த நிலையில், குடும்பத்தினர் தந்தை, மகன் இருவரையும் தேடி வீட்டுக்குச் சென்றனர். அப்போது முருகன் மட்டும் வீட்டு மாடியில் பாதுகாப்பாக இருந்துள்ளார். அவரிடம் அருண் பற்றிக் கேட்டபோது, அவர் வீட்டுக்கு வரவே இல்லையே என்று தெரிவித்துள்ளார்.
இதனால், குடும்பத்தினர் அருண் காணாமல் போனதாக பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் இன்று காமகோடி நகரில் உள்ள ஒரு முட்புதருக்குள் ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் மிதப்பதாக பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்குத் தகவல் வந்துள்ளது. உடனடியாக அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனை செய்ய குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் நடத்திய விசாரணையின்போது, சடலமாக மீட்கப்பட்டது காணாமல் போன அருண் என்று தெரியவந்தது.
அருணின் குடும்பத்தினரும் இதனை உறுதிப்படுத்தினர்.அருணை இழந்து, அவரது குடும்பத்தினர் கதறிய காட்சி, காண்போரை கலங்க வைத்தது. அருண் தனது அப்பாவைத் தேடிப் போனபோது வெள்ளத்தில் சிக்கி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. வெள்ள பாதிப்புகளுக்கு மத்தியில், அப்பாவை தேடிச் சென்ற மகன், உயிரிழந்த இந்தச் சம்பவம் பள்ளிக்கரணை பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.