இமாச்சல் பிரதேசத்தில் கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாயமான சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் நிலை குறித்து தகவல் அறிய 2 நாளாகும் என்று இமாசல பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது. பனிமூட்டம் காரணமாக மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அதிமுக முன்னாள் நிர்வாகியும் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமியின் ஒரே மகன் வெற்றி துரைசாமி. 45 வயதான வெற்றி துரைசாமி தொழில் அதிபர் ஆவார். சினிமா துறையிலும் ஆர்வம் கொண்ட வெற்றி துரைசாமி கடந்த 2021 ஆம் ஆண்டு விதார்த்-ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியான ‘என்றாவது ஒரு நாள்’ என்ற படத்தையும் இயக்கினார்.

வெற்றி துரைசாமி, கடந்த 3 நாட்களுக்கு முன்பு இமாசல பிரதேசத்தில் உள்ள லடாக் பகுதிக்கு சுற்றுலா சென்றார். வெற்றி துரைசாமியுடன் அவரது உதவியாளரான கோபிநாத் (வயது 35) என்பவரும் உடன் சென்றிருந்தார். சுற்றுலாவை முடித்து விட்டு சென்னை திரும்புவதற்காக நேற்று, வெற்றி துரைசாமி அங்குள்ள விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டார். காரை டென்சின் என்பவர் ஓட்டினார். கார் கஷங் நாலா என்ற மலைப் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, டிரைவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்தது.
இதையடுத்து காரின் சக்கரங்கள் நீரில் இருந்து வெளியே தெரிந்தது. இதை பார்த்த சுற்றுலா பயணிகள் பதறி அடித்துக் கொண்டு போலீஸில் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த காரை மீட்ட போது அதில் ஓட்டுநர் டென்சின் சடலமாக மீட்கப்பட்டார். கார் விழுந்த வேகத்தில் கீழே விழுந்த கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டார். அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். எனினும், காரில் பயணம் செய்த வெற்றியின் நிலை என்ன என்பதுதான் தெரியவில்லை. இதனால், அவரை சட்லஜ் நிதியில் படகில் சென்று தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.

கடுமையான பனிப் பொலிவு இருந்ததால், மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வெற்றி துரைசாமியின் நிலை குறித்து தகவல் அறிய 2 நாளாகும் என்று இமாசல பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது. சீட் பெல்ட் அணியாததால் வெற்றியின் நிலை குறித்த தகவல் கிடைக்கவில்லை. சில இடங்களில் பனிமூட்டம் காரணமாக மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இமாசல பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையே, மகன் விபத்தில் சிக்கி மாயமான தகவல் அறிந்தும் இமாசல பிரதேசத்திற்கு சைதை துரைசாமி புறப்பட்டு சென்றார். சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த பலர் இமாசல பிரதேசத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக பணியாற்றி வருகிறார்கள். அவர்களும் மீட்புப் பணிக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.