ராணுவ வீரர் ஹவில்தார் திரு பிரபாகரன் குடும்பம் காவல்துறையில் புகார் கொடுத்தும், தீர விசாரிக்காமல், பூசி மெழுகப் பார்க்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில்,”திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா படவேடு கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஹவில்தார் திரு பிரபாகரன் அவர்கள், தனது மனைவி மற்றும் குடும்பத்தினர் மீது, 120க்கும் மேற்பட்ட கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளியிட்டுள்ள காணொளி கண்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் கொடுத்தும், தீர விசாரிக்காமல், பூசி மெழுகப் பார்க்கிறது காவல்துறையின் விளக்கம்.
இந்தத் திறனற்ற திமுக அரசு, பிரிவினைவாதிகளுக்கும் சமூக விரோதிகளுக்கும் மட்டுமேயான அரசாக இருக்கிறது, சாதாரணப் பொதுமக்களுக்கான அரசாக இல்லை. இவர்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ராணுவ வீரரை அடித்துக் கொல்வதும், அவர்கள் குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல் விடுப்பதும், கடுமையான நடவடிக்கை இன்றி, மிகச் சாதாரண நிகழ்வாகக் கடந்து செல்கிறது.
தங்கள் சுக துக்கங்களைத் தொலைத்து, தேசத்தைப் பாதுகாக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு, நன்றி கொன்ற அரசாக இருக்கிறது திமுக அரசு.
காஷ்மீர் எல்லையில் பணியில் உள்ள ராணுவ வீரர் ஹவில்தார் திரு பிரபாகரன் அவர்களது மனைவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில், ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்படுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை, இந்தக் கையாலாகாத திமுக அரசு உணர வேண்டும்” எனக் கூறியுள்ளார்.