கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் ஆந்திராவில் இருந்து ரெயிலில் 36 கிலோ எடை கொண்ட கஞ்சா கடத்தி வந்த இளம் பெண் உள்பட 6 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் ரகசிய தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெபதாஸ் தலைமையில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று காலை திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்கிய சந்தேகத்திற்கு இடமான 6 பேரிடம் போலீசார் சோதனை செய்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த பைகளை சோதித்த போது, அதில், 18 பாக்கெட்டுகளில் மொத்தம் 36 கிலோ எடை கொண்ட கஞ்சா இருந்தது தெரியவந்தது. இது குறித்து இன்ஸ்பெக்டர் பத்மாவதி தலைமையில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அதில், ஆந்திராவில் இருந்து ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த சென்னை சோழவரம் அடுத்த காந்திநகரைச் சேர்ந்த இளம்பெண் நிவேதா என்கிற ஷாலினி (20), கார்த்திக் (32), அனுப்பம்பட்டுவை சேர்ந்த டேவிட்ராஜ் (27), சாரதி என்கிற சரத் (21), பொன்னேரி அடுத்த இலவம்பேட்டைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (24), திருவள்ளூரை அடுத்த வன்னிப்பாக்கம் பெரிய காலனியைச் சேர்ந்த அசோக்குமார் (24) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னையின் புறநகர் பகுதிகளான கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை, பொன்னேரி, மீஞ்சூர், அனுப்பம்பட்டு, அத்திப்பட்டு, விம்கோ நகர், திருவெற்றியூர் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்வதற்காக அவர்கள் ஆந்திராவில் இருந்து ரெயிலில் கஞ்சா கடத்தி வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.