தஞ்சாவூர் மாவட்டத்தில் காவல் துறையில் பல்வேறு வழக்கில் தொடர்புடைய ரவுடியை வெட்டிக்கொன்ற வழக்கில் ஆறு பேர் சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரண்.
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருசென்னம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் குமார் (எ) முருகையன் வயது (50). இவர் கடந்த 31ஆம் தேதி இரவு திருக்காட்டுப்பள்ளிக்கு வந்து விட்டு, டூ வீலரில் மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திருவையாறு – கல்லணை சாலையில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவிலுக்கு மேற்கே சுமார் 200 மீட்டர் துாரத்தில், குமார் சென்று கொண்டிருந்த போது, பின்னால் கார் மற்றும் டூ வீலரில் வந்த கும்பல், அவரது வாகனத்தில் மோதியுள்ளனர்.

இதில், குமார் வாகனத்தில் இருந்து தடுமாறி சாலையில் கீழே விழுந்தார். அப்போது அந்த கும்பல், குமாரின் காலில் வெட்டியது. தொடர்ந்து பின் தலையில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதில் குமார் சம்பவ இடத்திலேயே மூளைப்பகுதி சிதறி இறந்தார்.இதனை கண்ட அருகிலிருந்தவர்கள் காவல் துறைக்கு தகவல் தேறிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த தோகூர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி, தஞ்சை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.ஆஷிஷ் ராவத் பார்வையிட்டார். கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரை கொன்ற நபர்களை தேடி வருகின்றனர். மேலும் சமீபத்தில் திருச்சியில் நடந்த இரட்டை கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் குமாருக்கு தொடர்பு உள்ளது. அத்துடன் ரவுடி பட்டியலில் குமார் பெயர் உள்ளதாகவும், இதனால் இந்த கொலை நடந்திருக்கலாம் என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கொலையாளிகளான திருச்சென்னம் பூண்டியைச் சேர்ந்த செந்தில் வயது (35), கந்தர்வகோட்டை அருகே மங்களூரை சேர்ந்த கொடியரசன் வயது (27), நடுப்படுகையை சேர்ந்த பிரவீன் வயது (24), வரகூரைச் சேர்ந்த விஜய் வயது (27), ஒன்பத்து வேலியைச் சேர்ந்த கமல் வயது (24), பழமார்நேரி சாலையை சேர்ந்த குமரவேல் வயது (21) ஆகிய ஆறு பேரும் கோயமுத்துார் மாவட்டம் சூலுார் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.