நாமக்கல் மாவட்டத்திற்கு 10டன் ரேசன் அரிசி கடத்த முயன்ற 6பேர் கைது.இரண்டு வேன் மற்றும் மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்த குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர் , கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
திருவாரூர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளர் தென்னரசு, போலீசார் செந்தில்குமார், சுரேஷ் ஆகியோர் திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரைச் சாலையில் வேதாரண்யம் ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் .

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை மறித்த போலீசார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர்.அப்போது வேன் டிரைவர் கோழி தீவனத்திற்கு அரிசி கொண்டு செல்வதாகத் தெரிவித்தார். இதனால் சந்தேகம் அடைந்த குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் , சரக்கு வேனை பின்தொடர்ந்து சென்றனர்.
மேலும் அந்த சரக்கு வாகனம் நாகை மாவட்டம் மூலக்கரை பகுதியில் ஒரு தனியார் அரவை ஆலையினுள் சென்றது . ஆலையில் தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் அங்குச் சட்டவிரோதமாக 10 டன் அளவிற்கு ரேஷன் அரசி பதுக்கி வைத்திருப்பதை உறுதிசெய்தனர் . மேலும் இந்த பதுக்கல் அரிசி இங்கிருந்து நாமக்கல் மாவட்டத்திற்குக் கடத்தப்பட உள்ளதாகவும் , காவல்துறையின் மேல்விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது .

இதனைத்தொடர்ந்து ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த போலீசார் தனியார் அரவை ஆலை உரிமையாளர் பாலமுருகன், சரக்கு வேன் ஓட்டுநர் மணிகண்டன், மினிலாரி டிரைவா் தியாகராஜன், லோடு மேன்கள் கோபிநாத், நுர்தீன், ஆதிஸ் முகமது ஆகிய 6 பேரைக் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மினிலாரி, சரக்குவேன், 3 இருசக்கர வாகனங்கள் சைக்கிள்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர் .